இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோரும் சுதந்திரக் கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதனும் பங்கேற்றனர்.
இக்கலந்துரையாடலில், இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு எந்தவகையிலும் அனுமதிப்பதில்லை என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன், இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு அறிவிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது.
இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத தொழில் முறைகள் முழுமையாக நிறுத்த, இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியாகவும், கச்சதீவு சந்திப்புக்கள் போன்று நட்பு ரீதியாகவும் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் நலன்களுக்கு அப்பால் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.