பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பாரிய தீவிபத்து ஏற்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்குமிடமின்றி தவித்து வருகின்றனர்.
காக்ஸ் பஜார் என்று அழைக்கப்படும் முகாமில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரவிய தீ, முகாமில் சுமார் 2,000 தங்குமிடங்களை அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி சுமார் 14:45 மணிக்கு தீ பரவத் தொடங்கியது. எனினும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை மற்றும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
அண்டை நாடான மியான்மரில் வன்முறையில் இருந்து தப்பிய 12,000பேர் இப்போது வீடற்றவர்களாக உள்ளதாக, பங்களாதேஷின் அகதிகள் ஆணையர் மிஜனூர் ரஹ்மான் தெரிவித்தார்.
மூன்று மணி நேரத்திற்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, ஆனால் குறைந்தது 35 மசூதிகள் மற்றும் அகதிகளுக்கான 21 கற்றல் மையங்களும் அழிக்கப்பட்டுள்ளன. குடிநீர் மையங்கள், பரிசோதனை வசதிகள் போன்ற அடிப்படை சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.