கிரேக்கத்தை உலுக்கிய ரயில் விபத்தில் உயிரிழந்த 57 பேரின் குடும்பத்தினரிடம், கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
பல நாட்களாக போராட்டங்கள் தொடர்ந்தநிலையில் அவரது இந்த மன்னிப்பு வந்துள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டபோது பொலிஸாருடன் மோதல்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் 12,000 பேர் கலந்துகொண்டதாக பொலிஸ்துறை மதிப்பிட்டுள்ளது. இதன்போது, ஏழு அதிகாரிகள் காயமடைந்ததாகவும், ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சில ஆர்ப்பாட்டக்காரர்கள் குப்பைத் தொட்டிகளுக்கு தீ வைத்தனர் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசினர். பதிலுக்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசினர்.
போராட்டக்காரர்கள் இறந்தவர்களின் நினைவாக நூற்றுக்கணக்கான கருப்பு பலூன்களை வானத்தில் பறக்கவிட்டதாகவும், சிலர் ‘கொலையாளி அரசாங்கங்கள் ஒழிக’ என்ற பதாதைகளை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி இரவு எதிரெதிர் திசையில் பயணித்த ஒரு பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் விபத்துக்குள்ளானதில் 57பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.