திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருடன் தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது உள்ளூராட்சித் தேர்தல் குறித்த தீர்மானம் எடுப்பதை மேலும் தாமதப்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் வாக்கெடுப்புக்கான புதிய திகதியை அறிவிப்போம் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடுவது உள்ளூராட்சித் தேர்தலை தொடர்ந்து தாமதப்படுத்தும் செயற்பாடு என கருதுவதாக அக்கட்சியின் ஊடக பேச்சளார் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
திறைசேரியின் செயலாளர், அரசாங்க அச்சகமும் தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற ஆணைக்குழுவின் அறிவிப்பின் பின்னணியில் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதியை விடுவிப்பதை தடுக்கும் செயற்பாடுகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதி விடுவிப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த தடையுத்தரவு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள சுமந்திரன் , 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்பட வேண்டும் என்றார்.