ஐரோப்பாவிற்கு ரஷ்ய ஆற்றலை வழங்கும் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடிக்கச் செய்தது உக்ரைனிய சார்பு குழுவாக இருக்கலாம் என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மேற்கு மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஒரு முக்கிய புள்ளியாக இருந்த உக்ரைனிய சார்பு குழு, நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை வெடிக்கச் செய்ததாக அமெரிக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கின்றது.
ஆனால், இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது பற்றி மேலும் எதையும் கூறுவதற்கு முன்பு அவை இறுதி செய்யப்படும் வரை காத்திருப்பது சரியானது என ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார்.
இதனிடையே இந்த தகவல்களை கொண்டு வெளிப்படையான விசாரணையை நடத்துமாறும் அதில் தானும் பங்கேற்க விரும்புவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும், ஊடக அறிக்கைகள் கவனத்தைத் திசைதிருப்ப ஒரு ஒருங்கிணைந்த முயற்சி எனவும் விசாரணையின்றி தாக்குதல்களைப் பற்றி அமெரிக்க அதிகாரிகள் எப்படி எதையும் கருத முடியும் எனவும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, உக்ரைனுக்கான ஆதரவை வலுவிழக்கச் செய்யும் ஊடக அறிக்கைகள் குறித்து தான் கவலைப்படவில்லை என உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறினார்.
இதற்கிடையே, இந்த தாக்குதலை நடத்தியது உக்ரைனியக் குழுவா, உக்ரைனிய உத்தரவின் பேரில் நடந்ததா அல்லது உக்ரைனிய சார்பு குழு அரசாங்கத்தைப் பற்றி அறியாமல் செயல்படுகிறதா என்பதை தாங்கள் தெளிவாக வேறுபடுத்த வேண்டும் என ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்தார்.
ரஷ்யாவையும் ஜேர்மனியையும் இணைக்கும் குழாய்களில் வெடிப்புகள் செப்டம்பர் 26ஆம் திகதி சுவீடன் மற்றும் டென்மார்க்கின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களில் நடந்தன. இந்த குண்டுவெடிப்புகள் வேண்டுமென்றே நடத்தப்பட்டவை என்று இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன, ஆனால் யார் பொறுப்பு என்று இதுவரை கண்டறியப்படவில்லை.