நாட்டில் இடம்பெறுவது ஜனநாயக ஆட்சியா, சர்வாதிகார ஆட்சியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெறுவது ஜனநாயக ஆட்சியா, சர்வாதிகார ஆட்சியா? பல்கலைக்கழக மாணவர்கள்மீது அரச வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
களனி மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க றோயல் கல்லூரியின் பழைய மாணவர். ஆனால் றோயல் கல்லூரி மாணவர்களுக்கும் கண்ணீர் புகை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெட்கம்….வெட்கம்…..
இந்த அரசின் அடக்குமுறைகளுக்கு நாம் அஞ்சமாட்டோம். பல்லாயிரக்கணக்கான மக்களுடன் வீதிக்கு இறங்கி, தேர்தலை பெறுவோம்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வாறு சரியாக கொடுக்கல், வாங்கல் செய்வது என்பது குறித்து அரசுக்கு தெரியவில்லை. அதனால்தான் ஐ.எம்.எப்பிடம் மண்டியிட்டுள்ளது.
காலை நக்கி கடன்பெறுவதற்காக, மக்கள்மீது சுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. மின் கட்டணம் உயர்வு, வரிக்கொள்கை எல்லாம் இதனால்தான் வந்துள்ளன. இப்படியான அரசை தேர்தல்மூலம் நிச்சயம் விரட்டியடிப்போம்.“ எனத் தெரிவித்துள்ளார்.