இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
அத்துடன், இலங்கை அணி இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.
மறுபுறம் அவுஸ்ரேலியா அணியுடனான இறுதி டெஸ்டில் விளையாடிவரும் இந்தியா அணி, ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா அணி, அவுஸ்ரேலியா அணியுடன் மோதும்.
கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸிற்காக 355 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து 18 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய, இலங்கை அணி, 302 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதற்கமைய இலங்கை அணி, நியூஸிலாந்து அணிக்கு 285 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 16ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளது.