கொழும்பு, புகையிரத நிலைய கழிப்பறையில் விடப்பட்ட குழந்தை, காலிமுகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களுக்குள் நடந்த ஒன்றின் விளைவு என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹதகம கூறியுள்ளார்.
போராட்டத்தின்போது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன என்றும்,போராட்டம் நடந்த பகுதியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
அவர் அவ்வாறு கூறுவது தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை பரிகசிப்பதற்காகத்தான். ஆனால் அவர் ஒரு பெரிய உண்மையை விழுங்கிவிட்டு கீழ்த்தரமான இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார்.
அப்பெரிய உண்மை என்னவென்றால், இலங்கைத்தீவின் இப்போதிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னெழுச்சிப் போராட்டங்களின் குழந்தைதான் என்பது. போராட்டங்கள் இல்லையென்றால் ரணிலுக்கு இந்தப் பதவி கிடைத்திருக்காது.
தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவாக ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.ஆனால் அவர்தான் தன்னெழுச்சி போராட்டங்களை நசுக்கினார். அதாவது அரசியல் அர்த்தத்தில் அவர் ஒரு தாயைத் தின்னி.
அவர் அவ்வாறு தன்னெழுச்சிப் போராட்டங்கள் நசுக்கப்பட்டபோது வசந்த முதலிகே-அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதானி- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பல மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.தன்னெழுச்சிப் போராட்டங்களின் பிரதானிகளில் ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார். தன்னெழுச்சிப் போராட்டங்களுக்காக ஒப்பீட்ளவில் அதிகம் தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவராகவும் அவர் காணப்படுகிறார்.
அண்மையில் அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார்.பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து தமது போராட்டத்திற்கு ஆதரவைக் கேட்பதே அவருடைய வருகையின் நோக்கம்.
சந்திப்பின்போது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உரையாடியிருக்கிறார்கள். ஆனால் வசந்த முதலிகே குழுவினர் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக யாழ் பல்கலைக்கழகத்தை எப்படி தங்களோடு இணைத்துக் கொள்ளலாம் என்பதில்தான் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.
இலங்கை முழுவதிலும் உள்ள 100 நகரங்களில் தாங்கள் போராட இருப்பதாகவும், அப் போராட்டங்களில் தமிழ் மாணவர்களும் இணைய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
தமிழ் மாணவர்கள் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை அவர்களே தென்னிலங்கைக்கு வந்து மக்களுக்கு கூற வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்கள். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை தாங்கள் செய்து தருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் சில நாட்களுக்கு முன் வசந்த முதலிகே பிபிசிக்கு வழங்கிய போட்டியில் யாழ்.பல்கலைக்கழகம் அவ்வாறு பத்து அம்சக் கோரிக்கையைக் கையளிக்கவில்லை என்று கூறயிருக்கிறார்.
பிபிசி இதுதொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் கேட்டிருக்கின்றது. வசந்த முதலிகே அணியிடம் தாங்கள் முன்வைத்த 10அம்ச கோரிக்கைகளை மாணவ அமைப்பின் கடிதத் தலைப்பில் எழுதிக் கொடுக்கவில்லை என்ற போதிலும் அவற்றை முன்வைத்தே தாங்கள் உரையாடியதாக யாழ். பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் கூறுகிறார்கள்.
சந்திப்பின்போது தாங்கள் எதைக் கதைத்தார்களோ அதையே கதைக்கவில்லை என்று கூறுபவர்களோடு எப்படிச் சேர்ந்து போராடுவது ? என்ற சந்தேகம் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உண்டு.
தென்னிலங்கையில் நடந்த தென்னெழுச்சி போராட்டங்கள் அதாவது இலங்கைத்தீவில் நடந்த நான்காவது பெரிய போராட்டம் ஒன்று நசுக்கப்பட்ட பின் தென்னிலங்கையில் இருந்து வடக்கை நோக்கி வந்த ஆகப் பிந்திய அழைப்பு அது.
அரசாங்கத்துக்கு எதிராகப் போராட வருமாறு தெற்கு வடக்கை அழைக்கின்றது. அந்த அழைப்புக்கு தமிழ் மாணவர்கள் கொடுத்த பதிலை மேலே கண்டோம்.
தமிழ் மக்கள் அப்படித்தான் பதில் கூற முடியும் என்பதைத்தான் வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்து போன சில நாட்களின் பின் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார தெரிவித்த கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாகத் தீர்வை வழங்க முடியாது என்று அநுரகுமார கூறியிருக்கிறார்.
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு 13ஆவது திருத்தத்தின் ஊடாக – மாகாண சபைகளின் ஊடாக தீர்வைப் பெற முடியும் என நீங்கள் நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு பதலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசமைப்பின் ஊடாகவே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அனுரகுமார கூறுவதின்படி 13ஆவது திருத்தம் ஒரு தீர்வு இல்லை என்றால் அதைவிடப் பெரிய தீர்வை அவர் மனதில் வைத்திருக்கிறாரா? என்று கேள்வி எழும்.
நிச்சயமாக இல்லை.அவர்கள் 13ஐ எதிர்ப்பது ஏனென்றால் மாகாண சபைகளை தமிழ் மக்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான்.
ஏற்கனவே வடக்கு-கிழக்கு இணைப்பை ஒரு நீதிமன்றத் தீர்ப்பின்மூலம் இல்லாமல் செய்த கட்சி ஜேவிபி என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
ஜேவிபி 13 எதிர்ப்பதற்கு மேற்கண்ட காரணத்தை விட மற்றொரு காரணமும் உண்டு அது என்னவெனில், 13ஆவது திருத்தம் இந்தியா பெற்றெடுத்த குழந்தை என்பதால்தான். அதாவது இந்திய எதிர்ப்பு.
ஜேவிபி தமிழ் மக்களின் சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை. சமஸ்ரியை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளவும் தயாரில்லை.ஜேவிபி மட்டுமல்ல தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததாக நம்பப்படும் முன்னிலை சோசியலிசக் கட்சியின் பிரதானியான குமார் குணரட்னமும் அப்படித்தான் கூறுகிறார்.
தமிழ் மக்களுக்கு சமஸ்டியை ஒரு தீர்வாக முன்வைக்க அவர்கள் தயாரில்லை. அவ்வாறு சமஸ்டியை ஒரு தீர்வாக முன் வைப்பதன் மூலம் சிங்கள பௌத்த வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் தயாரில்லை. இதுதான் பிரச்சினை.
இலங்கைத் தீவில் நிகழ்ந்த, உலகின் கவனத்தை மிகக் குறுகிய காலத்துக்குள் ஈர்த்த, படைப்புத்திறன் பொருந்திய ஓர் அறவழிப் போராட்டம் நசுக்கப்பட்ட பின்னரும், தென்னிலங்கையின் நிலைப்பாடு அப்படித்தான் காணப்படுகிறது.
தமிழ்ப் பகுதிகளில் ஒருபுறம் நிலப்பறிப்பு தொடர்கிறது.இன்னொரு புறம் பௌத்தமயமாக்கல் தொடர்கிறது.மட்டக்களப்பில் மைலத்தனை மேய்ச்சல் தரைகள் தொடர்ந்தும் அபகரிக்கப்படுகின்றன.
நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அங்கே ஆக்கிரமிப்பு நடக்கின்றது.தமிழ்மக்களின் கால்நடைகள் இரவில் இனம் தெரியாத நபர்களால் கொல்லப்படுகின்றன.இன்னொருபுறம் திருகோணமலையில் கன்னியா வெந்நீர் ஊற்று, குருந்தூர் மலை, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை போன்றவற்றில் பௌத்தமயமாக்கல் தொடர்கிறது. குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போதே நாட்டின் தளபதி சவீந்திர டி சில்வா 100பிக்குகளோடு நாவற்குளிக்கு வந்திருக்கிறார். அங்கே கட்டப்பட்டிருக்கும் விகாரைக்கு கலசத்தை வைப்பது அவர்களுடைய நோக்கம் என்று கூறப்படுகிறது.
ஆனையிறவில், கண்டி வீதியில், தட்டுவன் கொட்டிச் சந்தியில், கரைச்சி பிரதேச சபை இலங்கைத்தீவின் மிக உயரமான நடராஜர் சிலையை கட்டியெழுப்பிய பின் தளபதி சவேந்திர டி சில்வா நாவற்குழிக்கு வருகை தந்திருக்கிறார்.
அதாவது அரசின் அனுசரணையோடு ராணுவ மயப்பட்ட ஒரு மரபுரிமை ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் தமிழ்மக்கள் அதற்கு எதிராகப் போராடும்போது அவர்களோடு வசந்த முதலிகே வந்து நிற்பாரா? ஜேவிபி வந்து நிக்குமா? சஜித் வந்து நிற்பாரா? அல்லது குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்தில் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவாக சுலோக அட்டைகளைத் தாங்கியபடி சந்திகளில் நிற்கின்ற இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த மிகச் சிறிய கட்சிகள் வந்து நிற்குமா?
இல்லை. அவர்கள் வர மாட்டார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டம் அவர்களைத் தீண்டியதால் அவர்கள் தமிழ் மக்களை நோக்கி வருகிறார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இனப்பிரச்சினைதான் என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இனப் பிரச்சினையை தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே தமிழ்மக்கள் அவர்களோடு எந்த அடிப்படையில் இணைந்து போராடுவது?
அதே சமயம் வசந்த முதலிகேயின் யாழ் விஜயம் வெற்றி பெறவில்லை என்பது ரணிலுக்கு ஆறுதலானது. தனக்கு எதிராகத் தமிழ் மக்களை எதிர்க்கட்சிகளால் அணி திரட்ட முடியாது என்பது அவருக்கு ஒரு விதத்தில் ஆறுதலான விடயம். தங்களுக்கிடையே ஒற்றுமைப்பட முடியாதிருக்கும் எதிர்க்கட்சிகள் தமிழ் மக்களையும் இணைக்கமுடியாமல் இருப்பது என்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஆறுதலான ஒரு விடயம்தான்.
மேலும் வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்து போன காலத்தையொட்டி கிண்ணியா வெந்நீரூற்று விவகாரம் மீண்டும் சூடாகி இருக்கிறது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டை விவகாரமும் ஊடகங்களில் சூடான செய்தியாக இருக்கிறது.
இவை தற்செயலானவைகளா? அல்லது வேண்டுமென்று திட்டமிட்டு செய்யப்படுகின்றவையா?என்று ஒரு நண்பர் கேட்டார். ஏனெனில் இது போன்ற தொல்லியல் ஆக்கிரமிப்புக்களை இப்பொழுது ஏன் தீவிரப் படுத்தவேண்டும்? அதுவும் ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னணியில், அதைவிடக் குறிப்பாக வசந்த முதலிகே யாழ்ப்பாணத்துக்கு வந்துபோன ஒரு பின்னணியில், அரசாங்கம் அவ்வாறு நடந்து கொள்வதன் பின்னணி என்னவாக இருக்கும்? என்று மேற்சொன்ன நண்பர் கேட்டார்.அவருடைய கேள்வி நியாயமானது.
தமிழ் மக்களை எதிர்நிலைக்கு தள்ளிவிட்டால்,அவர்கள் வசந்த முதலிகேயோடு இணைய மாட்டார்கள். தங்களோடு சேர்ந்து போராட வா என்று கேட்பார்கள். அதை வசந்த முதலிகே செய்ய மாட்டர். ஜேவிபி செய்யாது.
எனவே ஒருபுறம் தமிழ் மக்களின் கவனத்தைப் புதிய பிரச்சினைகளின் மீது திசை திருப்பி விடலாம். இன்னொருபுறம் தென்னிலங்கையின் தன்னெழுச்சிப் போராட்டங்கள் வடக்குடன் இணைவதைத் தடுக்கலாம்.
அதாவது தொகுத்துக்கூறின் தனக்கு எதிரான சக்திகள் ஒன்று திரள்வதை ரணில் கெட்டித்தனமாகத் தடுத்துவருகிறார்.
அவ்வாறு அரசாங்கத்துக்கு எதிரான ஒரு பலமான கூட்டு ஜனவசியம் மிக்க தலைமையின் கீழ் உருவாகவில்லையென்றால் அரசாங்கம் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாது.
பொருளாதாரத்தை ஒப்பீட்டளவில் சரி செய்யும்வரை அரசாங்கம் உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திவைத்துக் கொண்டேயிருக்கும்.