பிரான்ஸ் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் போது இதுவரை நாடு முழுவதும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தலைநகரில் மட்டும் 33 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டங்களின் போது, தென்மேற்கு நகரமான போர்டோக்ஸில் உள்ள நகர மண்டபம் தீக்கிரையாக்கப்பட்டது.
எனினும், துரிதமாக செயற்பட்ட தீயணைப்பு வீரர்களால் இது விரைவாக அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கு யார் காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பரிஸில், பொதுவாக அமைதியான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும், அவ்வப்போது மோதல் நிலை காணப்பட்டது. இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள், கடை ஜன்னல்களை அடித்து நொறுக்கிய வீதி தளபாடங்களை இடித்தார்கள் மற்றும் மெக்டொனால்ட் உணவகத்தைத் தாக்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைநகரில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பதற்றத்தை தணிக்க முயன்றனர்.
பிரான்ஸ் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கினர், பரிஸில் 119,000 பேர் இருந்தனர் என்று உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.