மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் முடிவடைந்துள்ளன.
இதன்படி, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இத்தாலியின் ஜென்னிக் சின்னர், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் அல்கராஸ் கார்பியாவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜென்னிக் சின்னர், 6-7, 6-4, 6-2 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
நாளை நடைபெறும் சம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில், இத்தாலியின் ஜென்னிக் சின்னர், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வை எதிர்கொள்ளவுள்ளார்.
இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, ரோமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இப்போட்டியில், பெட்ரா கிவிட்டோவா, 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் சம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில், பெட்ரா கிவிட்டோவா, கஸகஸ்தானின் எலெனா ரைபகினாவுடன் மோதவுள்ளார்.