செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய, ஒரு பெண்ணை ரஷ்ய புலனாய்வாளர்கள் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 வயதான தர்யா ட்ரெபோவா என்ற பெண், உக்ரைன் போருக்கு ஆதரவான பதிவர் விளாட்லென் டாடர்ஸ்கிக்கு ஒரு சிலையை ஒப்படைத்ததை ஒப்புக்கொண்டார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில் பழுப்பு நிற கோட் அணிந்த இளம் பெண் ஒருவர் அட்டைப் பெட்டியுடன் ஹோட்டலுக்குள் நுழைவதைக் காட்டியது. ஆனால், இந்த பொருள் வெடிக்கும் என்பது தனக்கு தெரியாது என கூறியுள்ளார்.
இதனிடையே, உக்ரைனில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், இது ரஷ்ய உள்நாட்டு சண்டையின் ஒரு வழக்கு என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
40 வயதான டாடர்ஸ்கி (உண்மையான பெயர் மாக்சிம் ஃபோமின்), ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு விருந்தினர் பேச்சாளராக ஹோட்டலில் ஆதரவாளர்களுடன் ஒரு தேசபக்தி கூட்டத்தில் கலந்து கொண்ட போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். மேலும், இதன்போது, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.