உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமையின் கீழ் தேர்தலை உரிய தினத்தில் நடத்துவது சிக்கலானது என ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் கால எல்லையை கருத்தில்கொள்ளும் போது ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவது ஒருபோதும் இயலாத விடயம் என அவர் கூறியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அவசியமான நிதி ஒதுக்கீடு இதுவரை உரிய முறையில் கிடைக்கப் பெறவில்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பிரதமருடன் கலந்துரையாடலொன்றை கோரிய போதிலும், அதற்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரிடம் சந்தர்ப்பம் கோரப்பட்ட போதிலும், இதுவரை அதற்கும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருடனான கலந்துரையாடலை நடத்துவதற்கு இனியும் எதிர்பார்க்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஒரு மாதம் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.














