2009 மே மாதத்துக்குப் பின் தமிழ் மக்களின் போராட்டம் எனப்படுவது நீதிக்கான போராட்டம் என்றுதான் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் கூறிக் கொண்டார்கள்.கடந்த 14ஆண்டுகளில் நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் எதுவரை முன்னேறியிருக்கிறார்கள்?
பைபிளில் ஒரு வசனம் உண்டு….”நீதியின் கிரீடம் முட்களால் ஆனது” என்று. அவ்வாறு நீதிக்கான போராட்டத்தில் முள்முடி தரித்த, கசையடி பட்ட, சிறை சென்ற,காயப்பட்ட, சொத்துக்களை இழந்த, உறுப்புகளை இழந்த, அல்லது எதையாவது இழந்த, எத்தனை அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு?
ஒப்பீட்டளவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முதிய தாய்மார் நீண்ட காலம் போராடி வருகிறார்கள். தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். அது ஒரு போராட்டம் அல்ல. வீதியின் ஓரத்தில் ஒரு குடிலில் குடியிருப்பதுதான் என்று யாரும் சொல்லக் கூடும்.ஆனால் அந்த முதிய தாய்மார் வீட்டில் பேரப்பிள்ளைகளோடு சந்தோசமாக இருக்கலாம். அல்லது ஆடு வளர்க்கலாம். கோழி வளர்க்கலாம். அல்லது பாய் இழைக்கலாம். அல்லது வீட்டில் சீரியல் பார்க்கலாம். அவை எவற்றையுமே செய்யாமல் அவர்கள் தெருவோரக் குடிலில் வந்து குந்தியிருக்கிறார்கள் என்று சொன்னால், அதில் ஏதோ ஒரு அர்ப்பணிப்பு உண்டு. எனினும் அந்தப் போராட்டம் மக்கள் மயப்படவில்லை.
இது தவிர காணிப் பறிப்புக்கு எதிராகவும், சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும், அரசியல் கைதிகளுக்காகவும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும் தமிழ்மக்கள் ஆங்காங்கே தெட்டம் தெட்டமாகப் போராடி வருகிறார்கள்தான். ஆனால் இந்த போராட்டங்கள் எதிலும் யாரும் முள்முடி தரிக்கவில்லை.அதாவது உச்சமான தியாகங்களைச் செய்து ஒருவருமே போராடவில்லை. பெரும்பாலான போராட்டங்கள் கவன ஈர்ப்பு போராட்டங்கள், அல்லது சிறு திரள் போராட்டங்கள்,அல்லது கட்சிக்காரர்களின் போராட்டங்கள். பெருந்திரள் மக்களைக் கூட்டி தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு நோகக் கூடிய விதத்தில் போராட யாராலும் முடியவில்லை.ஒப்பீட்டளவில் பெரிய போராட்டங்களுங்கூட ஒன்றில் ஒரு நாள் போராட்டங்கள் அல்லது சில நாள் போராட்டங்கள்தான். இப்படித்தான் கடந்த 14 ஆண்டுகளாக தாயகத்தில் தமிழ் மக்கள் நீதிக்காக போராடி வருகிறார்கள்.
அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் நீதிக்கான போராட்டத்தை பொறுத்தவரை தமிழ் மக்கள் எதுவரை முன்னேறியிருக்கிறார்கள்? உண்மையில் நீதிக்கான போராட்டத்தின் மிக வாய்ப்பான களம் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில்தான் உண்டு.
முதலாவதாக அங்கே அவர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகரித்த ஜனநாயக வெளி உண்டு. இரண்டாவதாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வாக்குப்பலம் மிக்கவர்களாக புலம்பெயர்ந்த தமிழர்கள் எழுச்சி பெற்று வருகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு பெரிய பேரபலம்.மூன்றாவதாக நீதியை யாரிடம் கேட்கின்றார்களோ, அல்லது எந்த நாடுகளுக்கு ஊடாக நீதியைப் பெறலாம் என்று நம்புகிறார்களோ, அந்த நாடுகளில்தான் அவர்கள் வசிக்கிறார்கள். அந்த நாடுகள்தான் ஐநாவில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன. அந்த நாடுகள்தான் இலங்கையின் இரண்டு ராஜபக்சங்களுக்கு எதிராகவும் சில தளபதிகளுக்கு எதிராகவும் தடைகளை விதித்து வைத்திருக்கின்றன.அந்தத் தடைகளையும் தீர்மானங்களையும் தொடக்கப் புள்ளிகளாக வைத்துக்கொண்டு முன்னேறத் தேவையான ஆட்பலமும், பணபலமும்,அதிகரித்த ஜனநாயக வெளியும் அங்கே உண்டு. எனவே நீதிக்கான போராட்டத்தின் பிரதான ஈட்டி முனைகளில் ஒன்றாக புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் காணப்படுகிறது.
நீதிக்கான நெடும் பயணத்தில் தாயகத்தோடு ஒப்பிடுகையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் கடந்த 14 ஆண்டுகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள்.அந்த வெற்றிகளின் பருமன் போதாமல் இருக்கலாம். ஆனால் அவை தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டும் தொடக்கப் புள்ளிகள்.
இதுவரை நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் ஏதோ ஒரு பங்கு உண்டு.சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்திற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகம் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அரசுசாரா தீர்ப்பாயங்களை உருவாக்குவதிலும் அவற்றுக்கூடாக நீதிக்காகப் போராடுவதிலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களே அதிகம் உழைத்திருக்கிறார்கள்.
குறிப்பாக அமெரிக்கக் கண்டத்தில் இரண்டு ராஜபக்சக்களுக்கு எதிராகவும் சில தளபதிகளுக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கக் கண்டத்தில் இரண்டு பெரிய நாடுகளான அமெரிக்காவிலும் கனடாவிலும் இலங்கையின் முக்கிய பிரதானிகளுக்கு எதிராகப் பயணத் தடைகள் உண்டு. முதலில் அமெரிக்கா ராணுவத் தளபதிக்கு எதிராகப் பயணத் தடையை விதித்தது.அதன் பின் கனடா இரண்டு ராஜபக்சங்களுக்கு எதிராக தடைகளை விதித்தது. அதோடு ராஜபக்சகளால் மன்னிப்பு வழங்கப்பட்ட இரண்டு ராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் தடைகளை விதித்திருக்கிறது.அண்மையில் அமேரிக்கா முன்னாள் கடற்படைத் தளபதியைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருக்கிறது.
இப்படிப் பார்த்தால்,புலம்பெயர்ந்த தமிழ்ப்பரப்பில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அடைவுகள் உண்டு. ஆனாலும் அந்த வெற்றிகளுக்கு வரையறைகள் உண்டு. இலங்கைத்தீவின் அரசியல்வாதிகள் மற்றும் படைப் பிரதானிகளுக்கு எதிராகத் தடைகளை விதிக்கும் நாடுகள், குறிப்பிட்ட தனி நபர்களுக்கு எதிராகத்தான் தடைகளை விதித்து வருகின்றனவே தவிர,இலங்கைத் தீவின் அரசுக்கு எதிராகத் தடைகளை விதிக்கும் ஒரு நிலைமை அங்கு இல்லை.
அதுபோலவே ஐநா சபையிலும் தமிழர்களின் விவகாரம் மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போகப்படவில்லை.தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள சான்றுகளை சேகரிக்கும் அலுவலகமும் மனித உரிமைகள் பேரவைக்கு உட்பட்டதுதான்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக இலங்கைத் தீவில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதனை இதுவரையிலும் ஐநாவும் ஏற்றுக்கொள்ளவில்லை.எந்த ஒரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை.அது இனப்படுகொலை என்று ஏற்றுக் கொண்டால்தான் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஒரு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த வளர்ச்சி கடந்த 14 ஆண்டுகளில் இன்றுவரையிலும் ஏற்படவில்லை.இதுதான் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பின் நிலைமை.தொகுத்துப் பார்த்தால், கடந்த 14 ஆண்டுகளிலும் நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் இன்னும் சென்றடைய வேண்டிய தூரமே அதிகமாக உள்ளது.
அந்தத் தூரத்தைத் தீர்மானிக்கப்போவது தமிழ் மக்களின் உழைப்பு மட்டுமல்ல, பிராந்தியம் மற்றும் பூகோள அளவில் ஏற்படக்கூடிய நலன்சார் உறவு நிலை மாற்றங்களும்தான்.ஏனெனில் இந்தப் பூமியில் தூயநீதி என்று எதுவும் கிடையாது.அது நிலைமாறுகால நீதியோ,அல்லது பரிகார நீதியோ எதுவாயிருந்தாலும் அரசியல் நீதிதான்.அதாவது அரசுகளின் நீதிதான். அரசுகளுக்கு நலன்கள் உண்டு. அரசுகளுக்கும் அரசுகளுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் உறவுகள் உண்டு. புவிசார் அரசியல் நலன்களும் பூகோள அரசியல் நலன்களும் உண்டு.இந்த நலன்களின் அடிப்படையில்தான் ஈழத் தமிழர்கள் தொடர்பான முடிவுகளை அரசுகள் எடுக்கும்.நீதியின் அடிப்படையிலோ அல்லது நியாயத்தின் அடிப்படையிலோ அல்லது அறநெறிகளின் அடிப்படையிலோ அல்ல.
எனவே அரசுகளின் நீதி என்பது தூய நீதி அல்ல.அது முழுக்க முழுக்க அரசியல் நீதிதான். இது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கைத் தீவில் உள்ள சிங்கள மக்களுக்கும் பொருந்தும்.முஸ்லிம்களுக்கும் பொருந்தும். உலகில் உள்ள எல்லா அரசற்ற தேசங்களுக்கும் பொருந்தும்.
இதற்கு ஆகப்பிந்திய ஓர் உதாரணத்தை இங்கு காட்டலாம்.கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சி போராட்டங்களே அவை.அந்தப் போராட்டங்களை மேற்கு நாடுகள் பெருமளவுக்கு ஆசீர்வதித்தன.அந்தப் போராட்டக்காரர்களை ஒரு கட்டம் வரையிலும் பாதுகாத்தன. விமல் வீரவன்ச கூறுவதுபோல இக்கட்டுரை கூற வரவில்லை.ஆனால் மேற்படி போராட்டங்களுக்கு மேற்கு நாட்டு தூதரகங்களின் ஆசிர்வாதம் இருந்தது என்பது வெளிப்படையானது.அந்தப் போராட்டங்களின் விளைவாக சீனச் சாய்வுடைய ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதும் அந்தப் போராட்டத்தின் கனிகளை மேற்கு நாடுகளும் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய சட்டை பைகளுக்குள் தூக்கிப் போட்டுக் கொண்டு விட்டார்கள்.
அதாவது இலங்கைத் தீவில் நடந்த நாலாவது மக்கள் போராட்டம் ஒன்றின் கனிகளையும் மேற்கு நாடுகள் சுவீகரித்துவிட்டன என்று பொருள். கத்தியின்றி ரத்தமின்றி, அதிகம் காசு செலவழிக்காமல் ஒர் ஆட்சி மாற்றத்தை அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அது முழுமையான ஆட்சி மாற்றம் இல்லைத்தான். ஆனால் சீனாவை நோக்கிச் சாயும் ராஜபக்சக்களோடு ஒப்பிடுகையில் அங்கே மாற்றம் உண்டு. அந்த மாற்றம் மேற்குக்குச் சாதகமானது. இந்தியாவுக்கும் சாதகமானது. ஆனால் சிங்கள மக்கள் போராடியது அதற்காக அல்ல. அவர்கள் கேட்டது அமைப்பு மாற்றத்தை.ஆனால் அமைப்பு மாறவில்லை.ஆளை மாற்றி அமைப்பைப் பாதுகாத்திருக்கிறார்கள்.அதன்மூலம் போராட்டத்தின் கனிகளை மேற்கு நாடுகளும் ரணிலும் சுவீகரித்து விட்டார்கள். இலங்கைத்தீவின் பெரிய இனத்தின் கதையே இதுவென்றால்,சிறிய தமிழ் மக்களின் கதை எப்படியிருக்கும்? தென்னிலங்கையில் நடந்த தன்னெழுச்சிப் போராட்டங்களில் இருந்து தமிழ் மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அது ஆகப்பிந்திய ஒரு பாடம் அந்தப் பாடத்தை வைத்து தமக்கு கிடைக்கக்கூடிய நீதியின் பருமனையும் நீதிக்கான சாத்தியக் கூறுகளையும் தமிழ் மக்கள் மதிப்பிட வேண்டும். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் தமிழ்மக்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும்.