தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருகிறது. ஏனைய கட்சிகளை விட இந்த விவகாரத்தை அதிகம் கொதி நிலையில் வைத்திருப்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். ஆனால் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராக அக்கட்சி அண்மை காலங்களில் முன்னெடுக்கும் போராட்டங்கள் போதிய அளவுக்கு மக்கள் மயப்படாதவை. அது அனேகமாக கட்சி பிரமுகர்களின் போராட்டம்தான். எனினும் அந்த ஒரு கட்சிதான் களத்தில் தனித்து நிற்கின்றது. சில சமயங்களில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் தனித்து நிற்கின்றார். அவர் ஒரு மக்கள் பிரதிநிதி. இருபதாயிரத்துக்கும் குறையாத மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு மக்கள் பிரதிநிதி தனியாகப் போராடுகின்றார். அந்தக் களத்தில் அவருக்கு வாக்களித்த மக்களோ கட்சியின் ஆதரவாளர்களோ காணப்படவில்லை. அது உயர் பாதுகாப்பு வலையத்தோடு இணைந்த பகுதி. அதற்குள் போராடப் போனால் கைது செய்யப்படுவார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டும் இருக்கின்றார்கள். கைது செய்யப்பட்டவர்களுக்குள் சட்டவாளர்களும் அடக்கம்.எனவே சாதாரண மக்கள், கட்சியின் ஆதரவாளர்கள் அவ்வாறு போராடப் போனால் கைது செய்யப்படுவார்கள் என்ற நிலை உண்டு.
ஆனால் அறவழிப் போராட்டம் என்றால் அதுதான். அது சட்ட மறுப்புத்தான். சிறையை நிரப்பக் கட்சித் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். எவ்வளவுக் கெவ்வளவு தொண்டர்கள் தொகையாகச் சிறைகளை நிரப்புகின்றார்களோ,அவ்வளவுக்கவ்வளவு மக்கள் மக்கள் மத்தியில் நொதிப்பு உண்டாகும். அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படும்.
இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தி போராட்டத்தின் ஈட்டிமுனை போல முன்னணியில் நின்றார்.அவரை பிரிட்டிஷ் அரசு சில சமயங்களில் சிறையில் போட்டது. ஆனாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அவரை சிறைக்குள் போட முடியவில்லை. அவரை சிறைக்குள் போட்டால் இந்தியா கொந்தளிக்கும் என்று பிரிட்டிஷ்காரருக்கு தெரிந்திருந்தது. காந்திக்கு அந்தளவுக்கு ஜனவசியம் இருந்தது. அவருடைய அறவழிப் போராட்டம் வெற்றி பெற்றதற்கு அது ஒரு காரணம்.ஆனால் நமது நாட்டில் அவ்வாறு ஜன வசியமிக்க எத்தனை தலைவர்கள் உண்டு?
இதுதான் பிரச்சனை. தமிழ்மக்கள் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு; கட்சித் தலைவர்கள் உண்டு; உள்ளூர் மட்டத் தலைவர்கள் உண்டு. ஆனால் இவர்களில் எத்தனை பேர் ஜனவசியம் மிக்கவர்கள்? இவர்களில் எத்தனை பேர் தங்கள் பேச்சாற்றலால் தமிழ் மக்களைக் கட்டிப் போட வல்லவர்கள்? இவர்களில் எத்தனை பேர் முன் சென்றால் தமிழ் மக்கள் பின் செல்வார்கள்? இவர்களில் யார் சிறையில் வைக்கப்பட்டால், அல்லது தாக்கப்பட்டால், அல்லது தூக்கப்பட்டால் தமிழ் மக்கள் கொதித்து எழுவார்கள் ?
செல்வராஜா கஜேந்திரன் ஒரு தனி நபராக தையிட்டிப் போராட்டத்தை நடத்துவது குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. அவரை ஆதரிக்கும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்,போராட வேண்டும் போராடினால்தான் அடுத்த கட்டம் வெளிக்கும் என்று. உண்மை. போராடத்தான் வேண்டும். ஆனால் அந்த போராட்டம் எப்படிப்பட்டது என்பதிலும் தெளிவு இருக்க வேண்டும். குறிப்பாக அது மக்கள் மயப்பட வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
அதே சமயம் அவருடைய போராட்டத்தை விமர்சிப்பவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்… தையிட்டி விகாரை திறக்கப்பட்ட பொழுது அங்கு வந்த சிங்கள மக்களின் எண்ணிக்கை பெருமளவிலானது.ஆனால் தையிட்டி விகாரையை எதிர்த்துத் திரண்ட மக்களின் தொகை மிகச் சிறியது. விரல் விட்டு எண்ணக்கூடிய கொஞ்சம் பேர்தான் தையிட்டியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.அப்படியென்றால் அது அவர்களுக்கு மட்டும்தான் பிரச்சினையா? ஏனைய மக்களுக்கு பிரச்சினை இல்லையா?
இப்போராட்டத்தில் ஏன் ஏனைய கட்சிகளை இணைக்க முடியவில்லை? அல்லது ஏனைய கட்சிகள் ஏன் இணையத் தயார் இல்லை? தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏனைய கட்சிகளோடு நல்லுறவு கிடையாது. அது ஏனைய கட்சிகளை அயோக்கியர்கள்; நேர்மையற்றவர்கள்; இந்தியாவின் கைக்கூலிகள் என்றெல்லாம் விமர்சிக்கின்றது.அதனால் ஏனைய கட்சிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து போராடத் தயார் இல்லை. அதனால் போராட்ட களங்களில் முன்னணி தனிய நிற்க வேண்டியிருக்கிறது. அங்கேயும் கூட தனி ஒரு கட்சியாக மக்களைத் திரட்ட அவர்களால் ஏன் முடியவில்லை!
கடந்த 14 ஆண்டுகளாக அவர்கள் கட்டியெழுப்பிய ஆதரவுத் தளம் எங்கே ? இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்கும் அளவுக்கு அவர்கள் கடந்த 14 ஆண்டுகளில் வேலை செய்திருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற போராட்டங்களில் மக்களைப் பெருமளவில் திரட்டுவதற்கு ஏன் அவர்களால் முடியாமல் இருக்கிறது? 13 வது திருத்தத்திற்கு எதிராக இரண்டாயிரத்துக்கும் குறையாத மக்களை அவர்களால் திரட்ட முடிந்தது. எழுக தமிழ் கூட்டங்களில் மக்களைத் திரட்டியதில் அந்த கட்சிக்கு பெரிய பங்கு உண்டு. கஜேந்திரன் பொங்கு தமிழ் போராட்டத்தின் மூலம் மேலெழுந்த ஒருவர்.யாழ் பல்கலைக்கழக மாணவ அமைப்பின் தலைவராக இருந்தவர்.ஆனால் இப்பொழுது அக்கட்சிக்கும் பல்கலைக்கழக மாணவ அமைப்புக்கும் இடையிலான உறவு எப்படி உள்ளது? அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்களோடு அக்கட்சிக்கு முரண்பாடு ஏற்பட்டது. குறிப்பாக கலைப்பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவத் தலைவர் அக்கட்சியை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு முன்னரும் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி மாணவர்கள் ஒரு பேரணியை ஒழுங்குபடுத்திய பொழுது மாணவர்களுக்கும் முன்னணிக்கும் இடையே வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன.
தமிழர் தாயகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மத்தியில் எத்தனை தமிழ்க் கட்சிகள் இறங்கி வேலை செய்கின்றன? எல்லாக் கட்சிகளும் மாணவர் அமைப்புகளையும் மகளிர் அமைப்புகளையும் வைத்திருக்கிறன.ஆனால் அவை பலமான கட்டமைப்புகள் அல்ல.மக்கள் மத்தியில் பலமான கட்டமைப்புகள் இல்லையென்றால் மக்களைப் போராட்டத்தில் அணிதிரட்ட முடியாது.இந்த பாலபாடத்தைக்கூட தமிழ்க் காட்சிகள் கற்றுக்கொள்ளவில்லை.இலங்கை அரசாங்கம் தமிழ் கட்சிகளின் இந்த பலவீனத்தை நன்கு பயன்படுத்துகின்றது.அதனால்தான் தனது பினாமிகளின் மூலமும் ஏஜென்களின் மூலமும் பதில் போராட்டங்களையும்,போலி போராட்டங்களையும், நினைவு நாட்களைக் குழப்பும் போராட்டங்களையும் ஒழுங்கமைத்து வருகின்றது.
அண்மை மாதங்களாக அது போன்ற பல போராட்டங்களைத் தமிழ் மக்கள் கண்டிருக்கிறார்கள். கடந்த சுதந்திர தினத்திலன்று யாழ் கோட்டைப் பகுதியில் இருந்து புறப்பட்ட அரச சார்பு பேரணியில் காணப்பட்ட எண்ணிக்கையை விட குறைந்தளவு எண்ணிக்கையானவர்கள்தான் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து கிழக்கு நோக்கி புறப்பட்ட மாணவர்களின் பேரணியில் காணப்பட்டார்கள். அதுபோலவே கடந்த மே 18இலன்று கிளிநொச்சி ரொட்ரிகோ மைதானத்திலும், வவுனியா நகரசபை மண்டபத்திலும் அரசசார்பு அணிகள் நூற்றுக்கணக்கானவர்களைத் திரட்டி நினைவுகூர்தல் கூட்டங்களை ஒழுங்கு படுத்தினார்கள்.அண்மையில் தையிட்டி விகாரைக்கு ஆதரவாக ஒரு மக்கள் போராட்டத்தை நடத்தினார்கள். நாவற்குழி விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வுக்கு வந்த மக்களின் தொகை வெடுக்குநாறி மலைக்காக திரண்ட மக்களின் தொகையைவிட அதிகம் என்று ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள். இவ்வாறாக அரசாங்கம் தானும் மக்கள் போராட்டங்களை தனது ஏஜென்ட்களின்மூலம் ஒழுங்கமைத்து வருகின்றது.அரச வளங்களை பயன்படுத்தி, தாராளமாக காசை அள்ளி வீசி மக்களை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு வந்து போராட்டங்களை நடத்தலாம் என்ற முன்னுதாரணம் கடந்த 14 ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது.இது உண்மையான மக்கள் போராட்டங்களைக் குழப்பும் நோக்கிலானது. திசைதிருப்பும் நோக்கிலானது.
அரசாங்கமும் அதன் ஆதரவு சக்திகளும் இது போன்ற போராட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கு எது பிரதான காரணம்? தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலான போராட்டங்கள் பெருமளவுக்கு மக்கள் மயப்படாத வெற்றிடமே காரணம்.போராட்டங்களை மக்கள் மயப்படுத்தத் தேவையான கட்டமைப்புகளை கட்சிகள் கட்டியெழுப்பவில்லை என்பதே காரணம். தமிழ் கட்சிகள் விட்ட வெற்றிடத்தில் அரசாங்கம் தனது வளங்களைக் குவித்து போலிப் போராட்டங்களை ஒழுங்குபடுத்த தொடங்கிவிட்டது.
தையிட்டியில் கட்டப்பட்டிருக்கும் விகாரை படை வீரர்களுக்கானது என்று ராணுவத் தளபதி கூறுகிறார்.ஆனால் அதைத் தமிழ் பௌத்தர்களிடம் கையளிக்கப் போவதாக ஒரு தேரர் கூறுகிறார். அதற்கென்று அவர்கள் தமிழ் பௌத்தர்களை இனிக் கண்டுபிடிப்பார்கள் அல்லது உருவாக்குவார்கள்.
கடந்த மே பதினெட்டாம் திகதியன்று கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் நடந்த இரண்டு நினைவு கூர்தல் கூட்டங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு செய்தியைத் தெளிவாக உணர்த்துகின்றன. தமிழ்மக்கள் திரளத் தவறினால் தமிழ் மக்களைச் சிதறடிக்க முயலும் சக்திகளுக்கு வேலை இலகுவாகிவிடும்.தையிட்டிப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சில உறுப்பினர்கள் விசுவாசமாக போராடுவதை இக்கட்டுரை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் விசுவாசம் மட்டும் போதாது.போராட்டத்தை மக்கள் மயப்படுத்தத் தேவையான தெளிவான ஓர் அரசியல் தரிசனமும் வேண்டும்.