இயற்கையின் உண்மையான யதார்த்தத்தை புரிந்து கொண்டு முழு மனித ஆற்றலையும் பெருக்க உதவும் வழிமுறைகளின் தொகுப்பே பௌத்தமாகும். இது, இந்தியாவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் என்று அனைவராலும் அறியப்படும் சித்தார்த்த கௌதமரால் நிறுவப்பட்டது.
புத்தரின் பெரும்பாலான போதனைகள் அனைத்தும் விழித்தெழுவதற்காக அவர் சுயமாக உணர்ந்தவை, இதனால் மற்றவர்களும் தங்களுக்குள் இருக்கும் அறிவொளி புத்தராக மாறலாம். மக்கள் தங்களின் முக்கியத்துவங்கள், விருப்பங்கள் மற்றும் திறமைகளில் வேறுபட்டிருக்கலாம், புத்தராக மாறுவதற்கான திறன் என்பது ஒவ்வொருக்கும் சமமானது என்பதை அவர் கண்டார்.
இதற்கு மதிப்பளிக்கும் விதமாக, ஒவ்வொருவரின் வரையறைகளை கடைந்து வரவும், முழுத் திறனை உணரவும் அவர் எண்ணற்ற வழிமுறைகளை போதித்தார்.ஏற்றுக்கொள்ளப்படும் ஒவ்வொரு கலாசாரத்திற்கேட்ப பௌத்தம் பலவிதங்களில் அழுத்தங்களை சந்திக்கிறது, அதனால், பௌத்தம் பல்வேறு வடிவங்களில் உருவெடுக்கலாம், ஆனால், அனைத்திற்கும் அடிப்படை போதனை ஒன்றுதான்.
வாழ்வில் எவ்வளவோ சந்தோஷங்கள் இருந்தாலும், சிறு பூச்சியில் இருந்து, வீடில்லாதவர், கோடீஸ்வரர் என ஒவ்வொருவருமே பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில், நமக்கு வயோதிகம், உடல் நலக்குறைவு, நமக்கு பிரியமானவர்களின் இறப்பால் வெறுப்பு மற்றும் விரக்தியடைகிறோம்.
நாம் விரும்புவது கிடைப்பதில்லை அல்லது நாம் விரும்பாததைப் பெறுகிறோம்.சிக்கலான காரணிகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றிலிருந்தே பிரச்னைகள் எழுகின்றன. ஆனால் புத்தரோ, எதார்த்தம் பற்றிய அறியாமையே இறுதியான காரணம் என்கிறார்.
வாழ சாத்தியமற்ற வழிகள் குறித்து நமது மனம், நமக்குள்ளும், ஒவ்வொருவருக்குள்ளும், எல்லாவற்றிலும் எடுத்தியம்புவதும் காரணம்.நம்முடைய அறியாமை என்னும் உண்மையான காரணத்தை அழித்தால் எல்லாப் பிரச்னைகளில் இருந்து விடுபடுவதோடு எப்போதும் அந்தப் பிரச்சினையை திரும்பவும் அனுபவிக்க வேண்டாம் என்பதை புத்தர் கண்டார்.
இவ்வாறிருக்கையில், இலங்கை வரலாற்றில் பொசன் போயா தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். அத்தகையதொரு நாளில்தான் பௌத்தம் இலங்கைக்கு முதல் தடவையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
கி.மு. 328 ஆவது ஆண்டில் ஒரு பொசன் போயா தினத்தன்று இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தியின் புதல்வர் மஹிந்த தேரர் இலங்கைக்கு வந்து மிஹிந்தலை மலை உச்சியில் இலங்கையில் அரசாட்சி புரிந்து வந்த தேவநம்பியதீசன் மன்னனை சந்தித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இடம்பெற்றது.
கலிங்கப் போரில் தன்னை எதிர்த்துப் போராடிய எதிர்நாட்டு படைகளை போர்முனையில் படுதோல்வியடையச் செய்த அசோக மன்னன் அன்றிரவு போர்க்களத்திற்கு சென்று எதிரிகள் அடைந்த இழப்புக்களை கண்காணித்துக் கொண்டிருந்த போது, ஒரு வயோதிப் பெண் ஒரு இளம் போர்வீரரின் சடலத்தை தனது மடியில் வைத்து கண்ணீர்விட்டு அழுதுக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்து மனம் நெகிழ்ந்து போன அசோக சக்கரவர்த்தி, மனம் நொந்துபோனார்.
அசோகச் சக்கரவர்த்தி நிலை தடுமாறி வேதனையில் மூழ்கியிருந்த போது, அவருக்கு போதிமரத்து மாதவன் புத்தபெருமானின் நற்போதனைகளின் உண்மைத் தத்துவத்தை புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்புக் கிடைத்தது.அன்று முதல் அசோகச் சக்கரவர்த்தியின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது.
யுத்தம், போன்ற தீய எண்ணங்களை அடியோடு துறந்துவிட்ட அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த தம்மத்தைத் தழுவி பௌத்த தம்மத்தின் நற்போதனைகளை உலகெங்கும் பரப்பும் பணியை ஆரம்பித்தார்.இந்த பௌத்த தம்மத்தை போதிக்கும் பணிக்கு தனது மகன் இளவரசர் மஹிந்தவையும், மகள் இளவரசி சங்கமித்தையையும் தேர்ந்தெடுத்தார்.
பின்னர் காவி உடையணிந்து பௌத்த தம்மத்தை உலகத்திற்கு பரப்பும் பணிக்காக துறவறம் பூண்ட அரஹட் மஹிந்த இலங்கைக்கு வந்து மன்னன் தேவநம்பிய தீசனை சந்திக்கச் சென்ற போது, மன்னன் மிஹிந்தலை மலை உச்சியில் மான் வேட்டையாடிக் கொண்டிருப்பதை அவதானித்தார்.
தேவநம்பிய தீச மன்னனை அணுகிய இவர், பௌத்த தம்மத்தை அவரிடம் போதித்து, கருணாமூர்த்தி புத்த பெருமானின் போதனைக்கு அமைய கருணையுள்ளம் கொண்ட வாழ்க்கையை நடத்த வேண்டுமென்று போதனை செய்தார்.இவர்களின் இந்த பௌத்த போதனையை கேட்டு மனம்மாறிய தேவநம்பியதீச மன்னன், மிருகங்களை வேட்டையாடுவதை அடியோடு கைவிட்டு பௌத்த தம்மத்தை தனது பல்லாயிரக்கணக்கான மக்கள் சகிதம் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வே இலங்கையில் பௌத்தம் தழைத்தோங்குவதற்கான ஆரம்பமாகும். அசோகச் சக்கரவர்த்தி இலங்கைக்கு போதனை செய்த பௌத்த தம்மம் சீனா, ஜப்பான், தூரகிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளுக்கும் பரவிய போதும், இலங்கையில்தான் பௌத்த தம்மம் வலுவாக நிலைகொண்டது.
இதனையடுத்து இலங்கையை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவரும் பௌத்த விகாரைகளையும், பௌத்த தூபிகளையும் நாடெங்கிலும் நிர்மாணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.