நாட்டின் பல பகுதிகளில் இன்றையதினம் சீரற்ற வானிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வடமேல், ஊவா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சீரற்ற வானிலை காரணமாக, கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு, நேற்று மாலை விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை, இன்று மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில், 3 ஆம் நிலை சிவப்பு எச்சரிக்கைக்கு உட்பட்ட பகுதிகளில வாழும் மக்கள், அதிக மழைவீழ்ச்சி பதிவானால், பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், 2 ஆம் நிலை எச்சரிக்கை பல இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலகப் பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, அயகம, குருவிட்ட மற்றும் பெல்மடுல்ல பிரதேச செயலாளர் பிரிவுகள் இந்த மஞ்சள் எச்சரிக்கைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.