டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் ‘101 கதை’ எனும் கலந்துரையாடல் நிகழ்வில் இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நிகழ்காலம் பற்றிய தெரிவு மற்றும் எதிர்காலம் பற்றிய நோக்கு என்பவை இல்லாமையே இவ்வாறான பிரச்சினைகளுக்கு முதன்மை காரணமாகும் என்று சுட்டிக்காட்டினார்.
யுத்த காலத்திலும் 4 கையடக்க தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்களும் 3 நிலையான தொலைபேசி இணைப்பு நிறுவனங்களும் நாட்டில் காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், அவற்றில் டயலொக் நிறுனத்தில் மாத்திரமே இலங்கையர் ஒருவர் பிரதம நிறைவேற்று அதிகாரியாக காணப்பட்டார் என்றும் குறிப்பிட்டார்.
டெலிகொம் நிறுவனத்தை அரசாங்கம் நிர்வகித்த போது கூட தேசிய பாதுகாப்பிற்கு இவ்வாறான சவால் காணப்பட்டதாகவும் அக்காலத்தில் புலிகள் அமைப்பினால் இரு தடவைகள் தாக்குலும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், டெலிகொம் நிறுவனம் முழுமையாக அரசாங்கத்தின் வசமாக காணப்பட்ட போதும் ஆட்சியாளர்கள் நிறுவனத்தின் பாதுகாப்பை பொருட்படுத்தவில்லை என்றும் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, அரசாங்கம் இன்று டெலிகொம்மின் இணைய இணைப்பை மாத்திரமா பயன்படுத்துகிறது எனக் கேள்வி எழுப்பிய அவர், பெரும்பாலான அரசாங்க தகவல்கள் ஜிமெயில் மூலம் பரிமாறப்படுவதாகவும் ஜிமெயில் வெளி நாட்டுக்குச் சொந்தமானது என்றும் குறிப்பிட்டார்.
அதேநேரம், அரசியல்வாதிகள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் பெரும்பாலானோர் வட்ஸ்அப் மூலம் அழைப்புகளை மேற்கொள்கின்றனர் என்றும் இலங்கைக்கு சொந்தமில்லாத வட்ஸ்அப் மூலம் பரிமாறப்படும் தகவல்கள் வெளிநாடுகளில் சேமிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், டெலிகொம் நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டால், அரச தகவல்கள் வெளியே செல்லும் என்று கூறுவது ஒரு பெரிய மாயையாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.