தாமே உருவாக்கிய ஜனாதிபதியை எதிர்க்க வேண்டிய தேவை மொட்டுக் கட்சிக்குக் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலொன்றை அடுத்தாண்டு நடத்தியே ஆகவேண்டும்.
ஜனாதிபதி நினைத்தால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதற்கு முன்னர் பொதுத் தேர்தலொன்றையும் நடத்தலாம். ஆனால், 2024 ஆம் ஆண்டு நாம் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயார் நிலையில்தான் இருக்கிறோம்.
சிலர் மொட்டுக்கட்சியும் ஜனாதிபதியும் முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று பொய்யான தகவல் ஒன்றை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனாதிபதியை அந்த ஆசனத்தில் அமர்த்தியது மொட்டுக்கட்சியினர் தான்;. நாம் உருவாக்கிய ஒருவரை நாமே எதிர்க்க வேண்டியத் தேவைக்கிடையாது.
எம்மைப் பொறுத்தவரை நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது. இதற்கான எமது கருத்துக்களை தொடர்ச்சியாக முன்வைப்போம்.
எமக்கு அமைச்சுப் பதவிகள் முக்கியமல்ல. மக்களுக்கான சேவையை எப்படி செய்யப் போகிறோம் என்பதுதான் முக்கியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.