கோட்டாபய ராஜபக்ஷ பயணித்த அதே வழியில்தான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பயணிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதிக்கும், ஜனாதிபதியை அந்தப் பதவிக்கு அமர்த்திய மொட்டுக் கட்சியினருக்கும் இடையில் தற்போது முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
மொட்டுக் கட்சியினர் அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதியிடம் கேட்க, ஜனாதிபதியோ இன்று தருகிறேன் நாளை தருகிறேன் என்று கூறுவதால்தான் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த அரசியல் சூதும், அரசியல் விளையாட்டும் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு மட்டும்தான் நாட்டில் நீடிக்கும். பொய்யான செய்திகளை பரப்புவதில், ஜனாதிபதியும் அரசாங்கங்கமும் கைத்தேர்தவர்களாக இருக்கிறார்கள்.
ரணிலும் – சஜித்தும் இணையவுள்ளார்கள் என்றெல்லாம்கூட தற்போது செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஒருபோதும் பதவிக்கு ஆசைப்பட்டு மக்களை ஏமாற்ற மாட்டோம் என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன்.
நாம் ஒரு பதவிக்கு சென்றால்கூட, அது மக்களின் ஆணையால் தான் இருக்குமே ஒழிய, ஊடக விளையாட்டுக்களால் அல்ல.
கோடீஸ்வரர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்துதான், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டையே அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றார்.
இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், கோட்டாபய ராஜபக்ஷ பயணித்த அந்தப் பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
ராஜபக்ஷ நிழல் அரசாங்கத்தின் ஊடாக ராஜபக்ஷக்களை அவர் தொடர்ச்சியாக பாதுகாத்து வருகிறார். திருடர் கூட்டத்தை பாதுகாக்கும் ஜனாதிபதியுடன் நாம் ஒருபோதும் இணையப் போவதில்லை என அவர் மேலும் குறிப்பிடடுள்ளார்.