ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளை தொடங்கிய பின், விக்னேஸ்வரன் அவரிடம் ஓர் ஆவணத்தை கையளித்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆவணத்தை அதன் சாராம்சத்தில் சொன்னால் 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று பொருள்படும்.
அதாவது 13 வது திருத்தத்தில் ஏற்கனவே எழுத்தில் இருந்த அதிகாரங்கள் படிப்படியாக கடந்த மூன்று தசாப்த காலத்தில் மத்திய அரசாங்கத்தால் தோல் இருக்கச் சுளை பிடுங்கப்பட்டு விட்டன. இந்நிலையில் அவ்வாறு நிர்வாக நடைமுறைகளுக் கூடாகவும் சட்டத் திருத்தங்களுக்கு ஊடாகவும் தந்திரமான நடவடிக்கைகளுக்கு ஊடாகவும் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு ஏற்பாடாக இடைக்கால ஏற்பாடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் இப்பொழுது கேட்டு வருகிறார். விக்னேஸ்வரனின் இந்தக் கோரிக்கையை ரணில் விக்ரமசிங்க பற்றிப் பிடிபதாகத் தெரிகிறது. விக்னேஸ்வரனின் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனம் தான் உண்டு. அவருடைய இடைக்கால ஏற்பாடு தொடர்பான கோரிக்கைக்கு ஏனைய தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. இந்த விடயத்தில் அவர் ஏனைய கட்சிகளோடு இணைந்து அந்த முடிவை எடுத்ததாகவும் தெரியவில்லை. முன்பு பேச்சுவார்த்தை மேசையில் அவர் அந்த ஆவணத்தை முன்வைத்த பொழுதும் அது தொடர்பில் ஏனைய கட்சிகளோடு பேசியிருக்கவில்லை என்று தகவல்கள் வெளிவந்தன.
தமிழ்க் கட்சிகளை ஒன்றாக்கலாம் என்ற நம்பிக்கை இப்பொழுது இல்லை. அவ்வாறு தமிழ் கட்சிகளை ஒன்றாக்குவதற்கு எந்த ஒரு சிவில் சமூகமும் முன்வராது. ஏற்கனவே அந்த முயற்சியில் ஈடுபட்ட தனி நபர்களும் இனி அந்தப் பகுதிக்குள் வர மாட்டார்கள். எனவே தமிழ்க் கட்சிகள் தாங்களாக தங்களுக்கிடையில் ஏதும் தேவை கருதிய ஒருங்கிணைப்புக்கு போனால் தவிர,தமிழ் ஐக்கியம் என்ற ஒன்றுக்கு இப்போதைக்கு இடமில்லை. இந்நிலையில் விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஏனைய கட்சிகள் ஏற்குமா இல்லையா என்பது தெரியவில்லை. நிச்சயமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது. அக்கட்சி வெளிப்படையாக பதின் மூன்றுக்கு இந்தியாவுக்கும் எதிரான நிலைப்பாட்டை முன்வைத்து வருகின்றது.
ஆனால் ஏனைய கட்சிகள் அந்தக் கோரிக்கை தொடர்பாக நமது கருத்தை பகிரங்கமாக கூற வேண்டிய ஒரு தேவை உண்டு. ஏனென்றால் 13ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விக்னேஸ்வரனுடையது அல்ல. ஏற்கனவே டெலோ இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஆறு கட்சிகள் இணைந்து கூடிக் கதைத்து எடுக்கப்பட்ட முடிவு அது. அந்த முடிவு எடுக்கப்பட்ட பொழுது அதில் விக்னேஸ்வரனும் ஓர் அங்கமாக இருந்தார். அந்த முடிவைப் பின்னர் தமிழரசு கட்சியும் ஏற்றுக் கொண்டது. அப்படிப் பார்த்தால் தமிழ்த் தேசிய அரங்கில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக் கொண்ட ஒரு கோரிக்கையாக அது காணப்படுகிறது. பல மாதங்களுக்கு முன்பு ஆறு கட்சிகள் ஒன்று கூடி இந்தியாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இந்த கோரிக்கைதான் பிரதானமாக முன்வைக்கப்பட்டது. எனவே இது தமிழ் தேசிய அரங்கில் உள்ள பெரும்பாலான கட்சிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக காணப்படுகின்றது.
அதை இப்பொழுது விக்னேஸ்வரன் வேறு வார்த்தைகளில் முன்வைக்கிறார். என்றாலும் அதை ஏனைய கட்சிகள் எதிர்க்குமாக இருந்தால், அவர்கள் ஏற்கனவே இந்தியாவுக்கு எழுதிய கடிதத்தில் தாமாக முன்வைத்த கோரிக்கையை தாமே நிராகரிப்பதாக அமைந்து விடும். எனவே தமிழ்த் தேசிய அரங்கில் பெரும்பாலான கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு கோரிக்கையாக அது காணப்படுகிறது. இந்தியாவுக்கும் அது திருப்தியாக இருக்கும். ஏனென்றால் அது 13ஐக் கடக்கவில்லை. எனவே இப்போதுள்ள தமிழ் அரசியல் சூழலைப் பொறுத்தவரை விக்னேஸ்வரனின் கோரிக்கையானது ஒப்பீட்டளவில் அதிக தரப்புகளின் ஆமோதிப்பை பெற்ற ஒன்றாக காணப்படுகின்றது. அதனால் அது நடைமுறை சாத்தியமான ஒரு கோரிக்கை போலவும் தோன்றக்கூடும்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும்தான் அதை எதிர்க்கின்றது. இந்நிலையில் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தும் நோக்கிலான இடைக்கால ஏற்பாடு ஒன்றை குறித்த விக்னேஸ்வரனின் கோரிக்கையை அரசாங்கம் எவ்வாறு அணுகப் போகின்றது?
மாகாண சபை தேர்தல்களை வைக்குமாறு இந்தியா அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தங்களை பிரயோகிக்கின்றது. எந்த ஒரு தேர்தலை வைத்தாலும் அது அரசாங்கத்தின் பலவீனங்களை வெளியே கொண்டு வந்து விடும். எனவே அரசாங்கம் தேர்தல்களை வைப்பதற்கு தயாரில்லை என்பதே உண்மை நிலை. குறிப்பாக உள்ளூராட்சி சபை தேர்தல் விடையத்தில் அரசாங்கம் எதிர்க்கட்சிகளை படுமோசமாக பேய்க்காட்டியிருக்கிறது. மாகாண சபை தேர்தல் விடையத்தில் அரசாங்கம் இந்தியாவை சமாளிக்க வேண்டியிருக்கிறது.
ரணில் விக்ரமசிங்க இந்த மாதம் 21 ஆம் தேதி டெல்லிக்கு போக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கே மகாண சபைத் தேர்தல் குறித்து ஏதும் கதைக்கப்படலாம். எனவே அந்தச் சூழலை எதிர்கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க விக்னேஸ்வரனின் இடைக்கால ஏற்பாடு என்ற கோரிக்கையை தனது நோக்கு நிலையிலிருந்து கையாள்வதற்கு முயற்சிக்கலாம். இதுவிடயம் தொடர்பாக அவர் ஏற்கனவே விக்னேஸ்வரனோடு உரையாடத் தொடங்கிவிட்டார். இந்த உரையாடலில் விக்னேஸ்வரன்,தந்தை செல்வநாயகத்தின் மருமகள் மற்றும் வடமகாண சபையின் அவைத்தலைவர் சிவஞானம் போன்றவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். விக்னேஸ்வரனின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமோ இல்லையோ அதைப் பரிசீலிப்பதான ஒரு தோற்றத்தை கட்டியெழுப்பினாலே அது அவர்களுக்கு இப்போதைக்கு ஒரு கால அவகாசத்தை பெற்றுக் கொடுக்க உதவும்.
ஏனெனில் விக்னேஸ்வரனின் கோரிக்கை அதாவது 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்பது அதன் சரியான பொருளில் அரசியலமைப்பில் இருப்பதை அமல்படுத்து என்ற கோரிக்கைதான். அதாவது 13ஆவது திருத்தத்தில் அரசியலமைப்பில் என்ன உண்டோ அதை முழுமையாக அமல்படுத்து என்ற கோரிக்கைதான். அதாவது அரசியலமைப்பில் கடந்த சுமார் 38 ஆண்டுகளாக எழுத்தில் இருக்கும் ஒன்றை தொடர்ச்சியாக வந்த எந்த ஒரு இலங்கை அரசாங்கமும் அமுல்படுத்தவில்லை என்பதே உண்மை. அதாவது நாட்டின் அதிஉயர் சட்டமாகிய அரசியலமைப்பை மீறியே மாகாண சபையை அவர்கள் பலவீனப்படுத்தியிருக்கிறார்கள் என்று பொருள். இவ்வாறு அரசியலமைப்பில் இருக்கும் ஒன்றையே கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அமுல்படுத்தாத ஒரு மோசமான அரசியலமைப்புப் பாரம்பரியம் உள்ள நாட்டில், மீண்டும் அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்து என்ற ஒரு கோரிக்கையை விக்னேஸ்வரன் முன்வைக்கின்றார்.
அந்தக் கோரிக்கையை அவர் அதன் கனதியோடு கூர்மையான விதங்களில் முன்வைப்பாராக இருந்தால் அதை சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு ஏற்றுக் கொள்ளாது என்பதனால், அதை இடைக்கால ஏற்பாடு என்று கேட்க வேண்டியுள்ளது என்று அவருடைய கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் யாப்பில் இருப்பதை அமல்படுத்து என்று நேரடியான வார்த்தைகளில் கேட்காமல், மறைமுகமான வார்த்தைகளில் கேட்க வேண்டிய ஓர் அரசியல் சூழல்தான் நாட்டில் உண்டு. இப்படிப்பட்ட ஒரு நாட்டில் தமிழ் மக்களுக்கு என்ன தான் கிடைக்கப் போகின்றது?
எனவே இந்த விடயத்தில் விக்னேஸ்வரனின் கோரிக்கையை அரசாங்கம் சாதகமாக பரிசீலிக்கும் என்பதை விடவும், தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள்தான் அதிகமாகத் தெரிகின்றன. அந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக காட்டிக் கொள்வதன்மூலம் தமிழ்க் கட்சிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்; இந்தியாவைச் சமாளிக்கலாம். அந்த இடைக்கால ஏற்பாடு அதன் பணிகளை முடிக்கும் வரையிலும் தேர்தலை வைக்க முடியாது என்று ஒரு காரணத்தைக் கூறி மாகாண சபைகளுக்குரிய தேர்தலையும் ஒத்திவைக்கலாம். மொத்தத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரையிலும் நிலைமையை சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு அது உதவக் கூடும். அதாவது விக்னேஸ்வரனின் கோரிக்கையானது தமிழ் மக்களுக்கு நன்மையாக முடியுமோ இல்லையோ, ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரையிலும் நிலமைகளைச் சமாளிப்பதற்கு உதவப் போகின்றதா?