யாழ், நெல்லியடியில் வீடொன்றினை உடைத்து சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளைக் கொள்ளையடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொன்னையா வீதியில் உள்ள வீடொன்று கடந்த வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டு, சுமார் 8 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 6.5 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
அது தொடர்பாக வீட்டின் உரிமையாளரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், 24 வயதான இளம் பெண்ணை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளில் குறித்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 4 பவுண் தாலிக்கொடி தனியார் நிதி நிறுவனத்தில் 3 இலட்ச ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.
அத்துடன் 3 பவுண் நகை பிறிதொரு வீட்டின் பூச்சாடியின் கீழ் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அடகு வைக்கப்பட்டு பெறப்பட்ட பணத்தில் 8 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்ட நிலையில் மிகுதி 2 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் குறித்த பெண்ணிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பணம் மற்றும் நகைகளையும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேநேரம், யாழ்ப்பாணம் கைதடி சந்திக்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றினை உடைத்து 3 இலட்ச ரூபாய் பணம் மற்றும் பால் மா பைக்கெட், குளிர்பான வகைகள் நபர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இந்த கொள்ளை சம்பவமானது அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.ரி.வி கமராக்களில் பதிவாகியுள்ள நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட நபரை அதன் அடிப்படையில் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸார் குறித்த கொள்ளையனை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.