நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கான வழிகளை தேர்ந்தெடுக்கும் மிகவும் முக்கியமான தருணத்தில் இலங்கை இருப்பதாக ஐ.நா. அபிவிருத்திச் செயற்திட்டம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா. அபிவிருத்திச் செயற்திட்டம், நிதியியல் கட்டமைப்புக்குள் நிலையான கொள்கைகளை உள்வாங்குவதன் மூலமும், தனியார் முதலீடுகளை ஈர்த்துக்கொள்வதன் ஊடாகவும் இலங்கையால் பரந்துபட்ட முதலீடுகளுக்கான வாய்ப்பை உருவாக்க முடிவம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச மூலதனத்தை உள்ளீர்த்துக்கொள்ளவும், மீண்டெழக் கூடியதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் இதன் மூலம் முடியும் என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
நிலைபேறான அபிவிருத்திப் பேரவை மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவற்றுடன் கூட்டிணைந்து ஐ.நா. அபிவிருத்திச் செயற்திட்டத்தினால் இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான முதலீடு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைபடமானது சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க சக்திவலு, உணவு மற்றும் குடிபானம், பொருள் உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய 5 முக்கிய துறைகளில் காணப்படுகின்ற 15 முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளப்படுத்தியுள்ளது.
அவ்வரைபடம் இலங்கை அதன் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதை இலகுபடுத்தக் கூடியவகையில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.