சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களில் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலஞ்ச – ஊழல் சட்டமூலத்தில் பெரும் குறை உள்ளது. அபகரிக்கப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீள பெற்றுக் கொள்ளும் விதிகள் இதில் உள்ளடக்கப்படவில்லை.
நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த செயற்பாட்டை சரியான முறையில் முன்னெடுப்போம். ஐ.எம்.எப். உடனான அதிகாரிகள் மட்டக் கலந்துரையாடலில் எம்மை அரசாங்கம் இணைத்துக் கொள்ளவில்லை.
எம்மையும் சேர்த்துக் கொண்டால் நாமும் அரசாங்கத்துக்கு ஒரு பலமாக இருப்போம் அல்லவா? நான் ஒரு விடயத்தை இங்கே கூறுகிறேன். உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு செல்ல வேண்டாம் என எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட 225 பேரும் ஐ.எம்.எப்.ஐ வலியுறுத்துவோம்.
இதனை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு முதுகெலும்பு உள்ளதா? இதனை ஏன் கூற முடியாது. இதற்கு என்ன பதில்?
இதோ எமது தீர்வு. இப்போது என்ன கூறுகின்றீர்கள். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஐ.எம்.எப். என்ன கூறுகிறது?
அதாவது, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. ஐ.எம்.எப்.புடன் மீள் பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும். அரசாங்கம் இந்த சவாலை பொறுப்பேற்க வேண்டும்.
அரசாங்கம் இந்த சவாலை பொறுப்பேற்றால் எதிர்க்கட்சியாக நாமும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவே உள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.