சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மெரினா கடற்கரையின் அருகே கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில் தற்போது கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்த அதே 15 நிபந்தனைகளை கடலோர ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ளது.
அதன்படி, நினைவுச் சின்னம் அமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களை கடலில் வீசக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, ஆமைகள் முட்டையிடும் பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பேனா நினைவுச் சின்னத்திற்கான அனைத்து அனுமதிகளும் கிடைத்துள்ளதால், விரைவில் பணிகளை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக, கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் தமிழக பாரதிய ஜனதாக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மத்திய பா.ஜ.க அரசு அனுமதிவழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.