உள்ளுர் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு குறித்து விவாதிக்க அரசாங்க நிதி தொடர்பான குழு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலுக்குப் பின்னர் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகள் குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை கூடவுள்ள நாடாளுமன்றத்தில் உள்ளுர் கடன் மறுசீரமைப்பு குறித்த பிரேரணையை சமர்ப்பிக்கும் முன்னர் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும்.
நேற்று பிற்பகல் அரசாங்க நிதி தொடர்பான குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் இடம்பெற்றது.
இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.
நேற்று கூடிய அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிவித்துள்ளார்.