பிரித்தானியத் தமிழர் பேரவை, பாரதிய ஜனதாவின் தமிழக அமைப்பாளர் அண்ணாமலையை பிரித்தானியாவுக்கு அழைத்திருக்கிறது “உறவுப் பாலம்” என்று அழைக்கப்படும் அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்குச் சென்ற அண்ணாமலை அங்கு முக்கிய சந்திப்புகளில் கலந்து கொண்டார்.
ஈழத் தமிழர்களை குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களை கவரும் விதத்தில் உரை நிகழ்த்தியுமிருக்கிறார். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு அவர் தரக்கூடிய தீர்வு 13ஆவது திருத்தத்தைக் கடக்கவில்லை.
அண்ணாமலையை பிரித்தானியாவுக்கு அழைத்தமையை ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு காரணங்களை அவர்கள் முன்வைக்கின்றார்கள். ஒன்று, பாரதிய ஜனதாவின் இந்துத்துவா நிலைப்பாட்டை ஈழத் தமிழர்கள் ஆதரிக்கக் கூடாது என்பது. இரண்டாவது அண்ணாமலை 13ஆவது திருத்தத்தைக் கடக்கவில்லை என்பது.
பாரதிய ஜனதாவின் இந்துத்துவா நிலைப்பாட்டை மறைமுகமாக அல்லது நேரடியாக ஏற்றுக் கொள்வதன்மூலம் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஈழத் தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டு விட்டது. இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாவை அணுக வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுப்பதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு.
முதலாவது காரணம், அவர்கள் காங்கிரஸ் கட்சியின் மீது கடுமையான விரோத உணர்வைக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது காரணம், காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து இறுதிக்கட்டப் போரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டதாகக் கூறி திமுகவின் மீதும் கடுமையான ஆத்திரத்தோடு காணப்படுகிறார்கள்.
மூன்றாவது காரணம், சிங்கள பௌத்த அரசாங்கம் தனது அரசியல் ராஜதந்திர இலக்குகளை வெல்வதற்காக எந்தப் பிசாசோடும் கூட்டுச் சேரும் ஒரு பின்னணியில், சிறிய ஈழத் தமிழர்களும் ஏன் அவ்வாறு யாரோடும் கூட்டுச் சேர்ந்து நமது அரசியல் இலக்குகளை வென்றெடுக்கக்கூடாது? என்று அவர்கள் கேட்கின்றார்கள்.
மேற்சொன்ன மூன்று காரணங்களையும் முன்வைத்து ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் இந்துத்துவா நிலைப்பாட்டை வரித்துக் கொண்டு பாரதிய ஜனதாவை அணுக முயற்சிக்கின்றார்கள். குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் அவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது.
இந்த நிலைப்பாட்டை முதலில் அதிகம் வெளிப்படுத்தியது பிரித்தானிய தமிழர் பேரவைதான். ஏற்கனவே பாரதிய ஜனதாவின் தமிழக சட்டமன்ற உறுப்பினரான வானதி ஸ்ரீநிவாசனை அவர்கள் நெருங்கி சென்றார்கள். அதன் வழியே இப்பொழுது அண்ணாமலையை அவர்கள் பிரித்தானியாவுக்கு அழைத்திருக்கின்றார்கள்.ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “கனெக்டிவிட்டி” தொடர்பான நிகழ்ச்சிச் திட்டங்களை அதிகம் ஊக்குவிப்பது பிரித்தானிய தமிழர் பேரவைதான்.
இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட கலாச்சார மண்டபம், யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து, யாழ்ப்பாணத்திற்கும் காரைக்காலுக்கும் அல்லது நாகப்பட்டினத்திற்கும் இடையிலான கப்பற் போக்குவரத்து,மன்னாருக்கும் தமிழகத்துக்கும் இடையிலான கப்பற் போக்குவரத்து போன்ற இணைப்புத் திட்டங்களை அவை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே பிரித்தானிய தமிழர் பேரவை ஊக்குவித்து வருகின்றது; ஆதரித்து வருகின்றது.
பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் ஆளும் கட்சியாக வந்ததிலிருந்து பிரித்தானிய தமிழர் பேரவையும் உட்பட புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலுள்ள சில அமைப்புகளும் தனி நபர்களும் பாரதிய ஜனதாவை அணுக வேண்டும் என்ற தவிப்போடு இந்துத்துவா நிலைப்பாட்டை நோக்கிச் சாய்வதை காணக்கூடியதாக இருக்கிறது.அல்லது இந்துத்துவா நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் பாரதிய ஜனதாவை நெருங்கி செல்லலாம் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இதில்,பிரித்தானிய தமிழர் பேரவை மட்டுமல்ல பிரித்தானியாவில் உள்ள சில அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒரு அமைப்பாக இணைந்து அண்மை மாதங்களாக இந்தியாவில் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்து வருவதனை இங்கு சுட்டிக் காட்டலாம். இவர்கள் பாரதிய ஜனதாவின் இதயம் என்று வர்ணிக்கப்படும் சிவசேனையோடும் நெருங்கி உறவாடுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
சிவசேனைப் பிரமுகர்களோடு இவர்கள் மேடைகளில் தோன்றும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இவர்களை ஈழத்து சங்கிகள் என்று விமர்சிப்பவர்களும் உண்டு.இந்த அமைப்பானது இதுவரையிலும் மூன்று கருத்தரங்குகளை ஒழுங்குப்படுத்தியிருக்கிறது. டெல்லியும் உட்பட இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் இக்கருத்தரங்குகளில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள் அல்லது சிவசேனையின் பிரமுகர்கள் பங்குபற்றி வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல தாயகத்தில் புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியானது மேற்படி கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்து வருகின்றது.இதுவரை நடந்த மூன்று கருத்தரங்குகளிலும் ஜனநாயக போராளிகள் கட்சி பங்குபற்றியிருகிறது.
இவ்வாறு பாரதிய ஜனதாவை ஏதோ ஒரு விதத்தில் கையாள்வதன் மூலம் ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாமா என்று மேற்படி புலம்பெயர்ந்த தமிழர்கள் முயற்சிக்கின்றார்கள்.
ஆனால் கடந்த எட்டு ஆண்டு கால பாரதிய ஜனதாவின் ஆட்சியைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் மிகத் தெளிவாக தெரிகிறது. அது என்னவெனில், ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்திய ஆட்சியாளர்களின் வெளியுறவு நிலைப்பாட்டுகளில் பெரிய அளவிற்கு மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதுதான். குறிப்பாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வாக வழங்கப்பட்ட 13ஆவது திருத்தத்தை பாரதிய ஜனதாவும் கடக்கவில்லை என்பதுதான்.
மிகக்குறிப்பாக இந்துத்துவா நிலைப்பாட்டை எடுப்பதன் மூலமோ, அல்லது நாங்களும் இந்துக்கள் என்று பாரதிய ஜனதாவை நெருங்கி செல்வதன் மூலமோ, இந்தியாவின் வெளியுறவு நிலைப்பாட்டில் பெரியளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை என்பதே கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்கள் பெற்றுக் கொண்ட அனுபவம் ஆகும்.
அதே சமயம் வேறு ஒரு மாற்றத்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இந்திய பிரதமர் மோடி அவர்கள் அண்மை காலங்களில் தமிழையும் தமிழ் புலவர்களையும் சைவத்தையும் மேலுயர்த்த காணலாம்.தமிழுக்கும் சைவத்துக்கும் அவர் கொடுத்துவரும் முக்கியத்துவத்தை வெறுமனே பாரதிய ஜனதாவின் இந்துத்துவ நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாமா ?அல்லது அதையும் தாண்டி தமிழகத்தைக் கையாள வேண்டிய ஒரு தேவை காரணமாக இந்திய பிரதமர் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறாரா? என்ற கேள்விகள் உண்டு.
தமிழகம் தொடர்ந்தும் திராவிட கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளயே இருக்கின்றது. அண்ணாமலை தமிழக அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பின் தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகளில் விறுவிறுப்பும் எழுச்சியும் தெரிகின்றன. எதிர்வரும் தேர்தலில் அதன் தொகுக்கப்பட்ட விளைவைக் காணலாம். ஆனால் அண்ணாமலை கவர்ச்சியும் சர்ச்சைகளும் நிறைந்த ஒரு தலைவராக மேலெழுந்து வருகிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனாலும் அவர் இலங்கைக்கு வந்த போதும் சரி, பிரித்தானியாவுக்குப் போன போதும் சரி இந்தியாவின் வெளியுறவு நிலைப்பாடுகளில் இருந்து விலகி நின்று கதைக்கவில்லை என்பதனை இங்கே தொகுத்துக் காட்ட வேண்டும். அதாவது அவர் 13ஐத் தாண்டத் தயார் இல்லை.
ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் இந்துத்துவா நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் சிங்கள பௌத்தமயமாக்களையும் தடுக்க முடியவில்லை. 13ஐயும் கடக்க முடியவில்லை என்பதுதான் இதுவரையிலுமான அனுபவம் ஆகும். அதுமட்டுமல்ல ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் பாரதிய ஜனதாவையும் சீமானின் நாம் தமிழர் கட்சியையும் நெருங்கி சென்றதன் விளைவாக, தமிழகத்தில் திராவிட கட்சிகளிடமிருந்து விலகி வரும் ஒரு போக்கையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
2009 வரையிலும் அல்லது சீமானின் எழுச்சி வரையிலும் தமிழகத்தில் ஈழத் தமிழர் விவகாரத்தை அதிகம் உரித்தோடு கையாண்டு வந்தது திராவிட மரபில் வந்த கட்சிகளும் இயக்கங்களும்தான். ஆனால் சீமானின் எழுச்சிக்குப் பின் திராவிடக் கட்சிகள் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் இருந்து மெல்ல விலகிச் செல்லும் ஒரு போக்கு அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் பாரதிய ஜனதாவையும் சீமானையும் நெருங்கிச் செல்லும் ஒரு போக்கின் வளர்ச்சியின் விளைவாக திராவிட கட்சிகள் ஈழப் பிரச்சினையில் இருந்து விலகிச் செல்லும் ஒரு போக்கும் அதிகரித்து வருகின்றது.
அதாவது ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் இந்தியாவை கையாள்வது அல்லது பாரதிய ஜனதாவை கையாள்வது அல்லது இந்துத்துவாவை ஒரு ராஜதந்திர கருவியாக பயன்படுத்துவது போன்ற வெளியுறவு நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலம் இந்தியாவின் ஈழத் தமிழர்கள் தொடர்பான வெளியுறவு நிலைப்பாட்டில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மாற்றம் எதையும் இதுவரையிலும் ஏற்படுத்த முடியவில்லை.
அதே சமயம் பிரித்தானிய தமிழர் பேரவையும் உட்பட புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகள் பெரும்பாலானவை 13வது திருத்தத்தை ஒரு இறுதித் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை திரும்பத் திரும்பக் கூறி வருகின்றன. அதை அண்ணாமலைக்கு தெரிவித்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
அவர்கள் அவ்வாறு பாரதிய ஜனதாவுக்கு தமது நிலைப்பாட்டைத் தெளிவாக முன்வைத்த பின்னரும் அண்ணாமலை போன்றவர்கள் 13ஆவது திருத்தத்தை திரும்பத் திரும்ப பகிரங்கமாக வலியுறுத்துவது எதை உணர்த்துகின்றது?