உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பினால், ஊழியர் சேமலாப நிதியம் எந்த வழியிலும் பாதிப்புக்குள்ளாக தாங்கள் உடன்படப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச கடனை மறுசீரமைக்க வேண்டுமெனில், உள்நாட்டுக் கடனையும் மறுசீரமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அரசாங்கம் இன்று வந்துள்ளது.
இது சரியான முறையில் இடம்பெற வேண்டும். ஊழியர் சேமலாப நிதியம் என்பது வேலை செய்யும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளும் ஒரு சேமிப்பாகும்.
2022 ஆம் ஆண்டு, நாடு பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுத்த பின்னர், இந்த நிதியத்திலிருந்து 44 வீதமான சேமிப்புதான் ஓய்வு பெற்ற ஒருவருக்கு கிடைத்துள்ளது. அதாவது, அவரது சேமிப்பு பாதியாக குறைவடைந்துள்ளது.
தற்போது மீண்டும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பினாலும், ஊழியர் சேமலாப நிதியம்தான் பாதிக்கப்படப்போகிறது.
நிதிக்குழுவிலும், நாடாளுமன்றிலும் இதற்கு எதிராக நாம் விவாதித்துள்ளோம். நாடாளுமன்றில் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, எதிர்வரும் 4 ஆம் திகதி ஊழியர் சேமலாப நிதியத்திடம் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
அங்கு தான் இதனை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படவுள்ளது. நாம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். எனவே, மக்கள் தொடர்பாகத்தான் சிந்திக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.