ஆடவருக்கான ஒருநாள் உலகக்கிண்ண தகுதிச்சுற்று கிரிக்கெட் போட்டியின் சூப்பர் சிக்ஸில் ஸ்கொட்லாந்து அணியிடம் தோல்வியடைந்த சிம்பாப்வே அணி குறித்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
இலங்கை அணி ஏற்கனவே இந்தியாவில் நடைபெறும் உலகக்கிண்ண தொடருக்கு 9 ஆவது அணியாக தகுதி பெற்றநிலையில், இறுதி இடத்திற்கு சிம்பாப்வே, நெதர்லாந்து. ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையில் கடும்போட்டி நிலவியது.
நேற்று நடைபெற்ற போட்டியில் சிம்பாப்வே- ஸ்கொட்லாந்து அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுதாடிய ஸ்கொட்லாந்து 234 ஓட்டங்களை குவித்தது. சிம்பாப்வேயின் நேர்த்தியான பந்து வீச்சால் ஸ்கொட்லாந்து அணியால் அதிக ஓட்டங்களை குவிக்க இயலவில்லை.
அந்த அணியின் மைக்கேல் லீஸ் அதிகபட்சமாக 48 ஓட்டங்களையும் பிராண்டன் மெக்கல்லம் 34 ஓட்டங்களையும் மேத்யூ கிராஸ் 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துசேச்சில் சிம்பாப்வே அணி சார்பாக வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 235 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சிம்பாப்வே அணி 41.1 ஓவரில் 203 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
அவ்வணி சார்பாக ரியான் பர்ல் 83 ஓட்டங்களையும் வெஸ்லி மாதேவேர் 40 ஓட்டங்களையும் ஷிகந்தர் ரசா 34 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்காக போரடினர்.
இதன்காரணமாக 31 ஓட்டங்களினால் தோல்வியை சந்தித்த சிம்பாவே அணி இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ண தொடருக்கு தகுதியாகும் வாய்ப்பை இழந்தது.
ஏற்கனவே இரண்டு முறை சம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.