பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த பேருந்தொன்று நேற்றைய தினம் மன்னம்பிட்டி கொட்டாலிய பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
மேலும் 40 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் பொலன்னறுவையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த விபத்து இடம்பெறுவதற்கு 3 வருடங்களுக்கு முன்னரே அதாவது 2020 ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி குறித்த பேருந்தின் செயற்பாடு குறித்து ஒருவர் அதிருப்தி தெரிவித்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அப்பதிவில் ” குறித்த பேருந்தானது பயணிகளின் உயிரைக் கருத்தில் கொள்ளாது மிகவும் வேகமாகப் பயணிப்பதாகவும், எதிர் திசையில் வாகனம் வந்தாலும் அவற்றுக்கு இடம்கொடுக்காமல் முந்திச்செல்வதாகவும், எனவே விரைவில் மக்களின் உயிரை அப்பேருந்தானது காவுவாங்கப்போகின்றது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த பதிவானது தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. குறித்த நபர் எச்சரித்ததைப் போன்றே நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இதனை கருத்தில் கொண்டிருந்தாலோ அல்லது அப்பேருந்தின் சாரதி மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தாலோ இக்கொடூர சம்பவம் இடம்பெற்றிருக்காது எனப் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் மற்றும் வாகன சாரதிகள் பொறுப்புடன் செயற்படுவதின் மூலமே விபத்தின் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.