கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர் எனினும் ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களை நாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உலக நாடுகள் பலவும் போராட்டங்களின் காரணமாக முடங்கிப் போயிருக்கும் நிலையில் குறுகிய காலத்தில் இலங்கையை மீட்க ஜனாதிபதியால் முடிந்தது.
பணவீக்கம், வங்கி வட்டி, மின் கட்டண குறைப்பு, வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் வருகை, ஏற்றுமதி, பங்குச் சந்தை, வெளிநாட்டு கையிருப்பு வீதம் என்பவற்றில் முன்னேற்றத்தை அவதானிக்க முடிகின்றது.
அதேபோல், அதற்கான போராட்டங்களின் முக்கியமான சில நோக்கங்களையும் அவதானிக்க முடிந்தது. அதற்காக இந்நாட்டு மக்கள் ஒன்று திரண்டனர்.
இருப்பினும் அரச சொத்துக்களையும் அழிப்பதற்கும், வீடுகளை தீ வைப்பதற்கும், கொலைகளைச் செய்யவும் மக்களுக்கு அவசியம் இருக்கவில்லை.
மாறாக போராட்டங்களில் பங்கேற்ற மக்களுக்கு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கம் இருக்கவில்லை. அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் மேற்படி போரட்டங்களின் பின்னணியில் நின்றன. அந்த போராட்டங்கள் நிறைவுற்ற ஒரு வருட காலத்தில் நாட்டில் என்ன நடந்தது என்பது தொடர்பில் மக்களுக்கு தற்போது தெளிவாகியுள்ளது.
அதேபோல் போராட்டங்களில் பங்கெடுத்திருந்த பலருக்கு வெளிநாடுகளிலிருந்து பெருமளவான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை நீதிமன்ற நடவடிக்கைளின் போது தெரியவந்துள்ளது.
அதனால் போராட்டங்களுக்கு தலைமைத்துவம் வழங்கிய பலருக்கு பணம் கிடைத்த விதம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தகவல் தெரிவிப்போம். கடந்த வருடத்தில் இதேநேரத்தில் ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்திக் கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்குள் காணப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.
ஆனால் அவ்வாறானதொரு சூழலில் எவரும் சவாலை ஏற்றுக்கொள்ள முன்வராத போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டார்.
நாட்டு மக்களுக்கும் முதலீடுகளை மேற்கொள்ள வரும் வர்த்தகர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மறுமுனையில் கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர்.
ஆனால் ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களை நாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.