விபத்திற்குள்ளான பேருந்தின் சாரதி போதைப்பொருளை பயன்படுத்தியிருந்தாரா என்பது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
விபத்துத் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொலன்னறுவை, மன்னம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டலிய பாலத்திலிருந்து பஸ் ஒன்று ஆற்றில் வீழ்ந்த சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று விபத்துக்குள்ளாகியிருக்கலாம்.
பஸ் சாரதிக்கு முன்னரும் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விபத்தின்போது சாரதி மதுபோதையில் இருக்கவில்லை என்பது பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.
அவர் வேறு ஏதேனும் போதைப்பொருளை பயன்படுத்தியிருந்தாரா என்பது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.