வடகொரியாவின் கிழக்கு வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் இரண்டு முறைகள் அத்துமீறி நுழைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் ‘இனிமேல் அவ்வாறு நடந்தால் அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம்‘ என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நீண்டகாலமா மோதல் போக்கு காணப்படுகின்றது. குறிப்பாக தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகின்றது.
இந்நிலையில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்து மீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கூறும்போது, வடகொரியாவின் கிழக்கு வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் இரண்டு முறைகள் அத்துமீறி நுழைந்துள்ளன.
மீண்டும் இவ்வாறு நடந்தால் அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எங்களது வான்வெளியில் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம். இதுபோன்ற சம்பவம் கிழக்கு கடலில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கடந்த காலங்களில் அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்திய சம்பவங்களை நினைவுப்படுத்துகிறோம். அமெரிக்காவால் வெறித்தனமாக அரங்கேற்றப்பட்ட வான் உளவு செயல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் ” இவ்வாறு தெரிவித்தார்.