முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கைவேலி பகுதியில் அரச காணியில் தற்காலிகமாக குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பத்தினர் மீது வனவளத் திணைக்கள ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மண்ணெண்ணையினையும், கத்தியினையும் வனவளத்திணைக்களத்தினர் எடுத்துச் சென்றதாகவும் அதனை பறித்து பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுமார் ஒன்பது குடும்பங்கள் அரச காணிகளை கையகப்படுத்தியுள்ளதாக வனவள திணைக்களத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், இன்று வரை புதுக்குடியிருப்பு மேற்கு கைவேலியில் காணி இல்லாதவர்களை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் கண்டுகொள்ளவில்லை எனவும் குறித்த பிரச்சினையை தீர்க்கும் முழுப்பொறுப்பும் பிரதேசசெயலகத்திற்கே உண்டு என அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் எதுவித முன்னறிவிப்பும் இன்றி வனவளத் திணைக்களத்தினர் இவ்வாறு அடாவடியாக நடந்து கொண்டமை தொடர்பாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.