இன மத கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் முத்தவெளிப் பகுதியில் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“க்லோகல் பெயார் 2023′ கண்காட்சியின் முதலாவது வேலைத்திட்டத்தை நாங்கள் யாழில் ஆரம்பிக்கின்றோம்.
வடக்கு தெற்கு நாங்கள் அனைவரும் ஒரே நாடு.
ஒரே இனம். இதில் எந்தவித இன வேறுபாடோ மத வேறுபாடோ, கட்சி வேறுபாடோ இந்த புதிய அரசாங்கத்தின் பயணத்தில் இல்லை எனும் செய்தியை வழங்குவதற்காகவே நாங்கள் இந்த முதல் வேலைத்திட்டத்தை வடக்கில் ஆரம்பித்துள்ளோம்.
கட்சி, ஜாதி, மத, இன வேறுபாடுகளை மறந்து எங்களுடன் இணையுமாறு வடக்கிலுள்ளவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.
வடக்கில் இருந்து கொழும்பிற்கு சென்று செய்ய வேண்டிய பல்வேறு தொழில் சார்ந்த வேலைகளை இந்த க்லோகல் வேலைத்திட்டத்தினுடாக செய்துக் கொள்ள முடியும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டு கற்கைகள் மற்றும் தொழில்பயிற்சிகள் உள்ளிட்ட சர்வதேசத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவதற்கு இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இன மத கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் ஆகவே இந்த இரண்டு நாள் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வடக்கிலுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்” என அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.