மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியமடு மேற்கு, பெரியமடு கிழக்கு, காய நகர், ஆகிய கிராம சேவையாளர் பகுதிகளில் மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற முடியாத 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் நலன் கருதி விசேட மருத்துவ முகாம் இன்று (17) இடம்பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் முதியவர்களுக்கான விசேட செயற்திட்டங்களை டெவ்லிங் நிறுவனம் நடாத்தி வருகிறது. அந்த வகையில் குறித்த இலவச மருத்துவ முகாம் மன்னார் ஈச்சளவக்கை பாடசாலையில் இடம் பெற்றது.
குறித்த மருத்துவ முகாமின் ஆரம்ப நிகழ்வில் அருட்தந்தையர்கள், டெவ்லிங் நிறுவன மாவட்ட இணைப்பாளர், திட்ட இணைப்பாளர், வைத்தியர்கள், தாதியர்கள், இயன் மருத்துவர்கள், பொது சுகாதார பரிசோதகர் உட்பட 3 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 180 மேற்பட்ட முதியவர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட முதியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை உட்பட சக்கர நாற்காலி, ஊன்றுகோல் வழங்கப்பட்டதுடன் கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகளும் வழங்கப்பட்டன. மேலும் மருத்துவ ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும் மருத்துவ முகாமுடன் இணைந்து இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.