அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை அரச ஊழியர்கள் தமது பணி சார்ந்த விடயங்களுக்குப் பயன்படுத்த ரஷ்யாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதிகாரிகள் அவர்களின் சொந்த தேவைக்காக அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவு நிறுவனங்கள் அப்பிள் நிறுவனத்தின் தொலைபேசி மற்றும் இதர சாதனங்களைக் கொண்டு உளவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக ரஷ்யா ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ள நிலையிலேயே ரஷ்ய அரசு இவ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாகவே அரச ஊழியர்களுக்கு இக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் குற்றச் சாட்டை மறுத்துள்ள அப்பிள் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதில் தங்கள் நிறுவனம் கவனமாகச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.