தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்ற 25ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் இனிதே நிறைவுப் பெற்றுள்ளது.
கடந்த 12ஆம் திகதி முதல் நேற்று வரை நடைபெற்ற இத்தொடரின் பதக்க பட்டியலில், ஜப்பான் 16 தங்க பதக்கங்கள், 11 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 10 வெண்கல பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 37 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது.
இதனைத்தொடர்ந்து சீனா 8 தங்க பதக்கங்கள், 8 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 6 வெண்கல பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 22 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும் இந்தியா 6 தங்கபதக்கங்கள், 12 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 9 வெண்கல பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 27 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
தொடரின் இறுதிநாளான நேற்று இலங்கை அணி 2 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.
இதன்மூலம் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 8 பதக்கங்களை வென்ற இலங்கை அணி புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்தது.
25 ஆண்டுகால ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் வரலாற்றில் ஒரு அத்தியாயம் ஒன்றில் இலங்கை அணி வென்ற அதிகபட்ச பதக்கங்களாகவும், புள்ளிப் பட்டியலில் அதிஉயர் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தது.
இதற்கு முன் 2002இல் இலங்கையில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை அதிகபட்சமாக 3 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தது.
அதுமாத்திரமின்றி, பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியிலும், 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டியிலும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் சாதனைகளையும் இலங்கை அணி வீரர்கள் முறியடித்திருந்தனர். அதேபோல, ஒரு தெற்காசிய போட்டி சாதனையும் முறியடிக்கப்பட்டது.
மேலும், இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 5 இலங்கை சாதனைகள் முறியடிக்கப்பட்டன.
பெண்களுக்கான 800 மீட்டர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டம், பெண்களுக்கான ஈட்டி எறிதல் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் இலங்கை சாதனைகள் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குகொண்ட 13 வீரர்களில் 11 பேர் பதக்கங்களை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
ஆசிய ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
…….
இந்தப் போட்டியில் பிரபல இந்திய அணிக்கு பலத்த சவாலைக் கொடுத்த போதிலும், இலங்கை அணியால் இரண்டாவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. எவ்வறாயினும், போட்டியை நிறைவு செய்ய 3 நிமிடங்கள், 15.41 செக்கன்களை இலங்கை அணி எடுத்துக் கொண்டது.
4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கை அணியினால் பதிவு செய்யப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியாக இது இடம்பிடித்ததுடன், இலங்கை சாதனையாகவும் பதிவானது.
இந்த நிலையில், வெள்ளிப் பதக்கம் இலங்கை அணியில் அருண தர்ஷன, தருஷி கருணாரத்ன, காலிங்க குமாரகே மற்றும் நதீஷா ராமநாயக்க ஆகியோர் இடம்பெற்றனர்.
4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டத்தில் இந்திய அணி (3:14.70) தங்கப் பதக்கத்தையும், ஜப்பான் அணி (3:15.71) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.