எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகளைக் காணவேண்டும். எதற்கெடுத்தாலும் சர்வதேசத்தை நாடுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்தை அமெரிக்கத் தூதுவர் தமிழ் தரப்பினருக்கு எடுத்துக் கூறி அதை முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தியிருப்பதானது எமது கட்சியின் நிலைப்பாடுகளே சரியானது என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கடந்த 33 வருடங்களாக 13ஆவது சீர் திருத்தத்தின் இன் அவசியத்தை குறிப்பாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறிவந்த நிலையில் தற்போது தமிழ் கட்சிகள் காலங்கடந்தாவது அதனை ஏற்று இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியமை வரவேற்கத்தக்க விடயம்.
இதேநேரம் இந்த 13 வது திருத்தம் உள்ளிட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஆரம்ப புள்ளி மட்டும் தான் என எமது கட்சியின் செயலாளர் ஜனநாயக கட்சியின் செயலளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால் அக்கால பகுதியில் சில தமிழ் அரசியல் தலைமைகள் 13 ஆவது திருத்தத்தை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஆரம்ப புள்ளியாக ஏற்காவிட்டாலும் தற்போது அதன் தாற்பரியத்தை அவர்களுக்கு காலம் உணர்த்தியுள்ளது.
இதை இவர்கள் கடந்தகாலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களின்போது ஏற்றிருந்தால் இன்று புலிகளின் தலைவர் பிரபாகரனும் உயிரோடு இருந்து ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் ஈடுபட்டிருப்பதற்கான சந்தர்ப்பமும் இருந்திருக்கும்.
இதேநேரம் இன்று 13 ஆவது திருத்தத்தை ஆரம்பப் புள்ளியாக கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்களை முன்னெடுப்பதற்கு தமிழ் கட்சிகள் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள நிலையில் யாழ் மாவட்ட சிவில் அமைப்பினரும் கடிதத்தை யாழ் இந்தியத் துணை தூதரகத்தில் கையளித்துள்ளனர்.
ஆகவே 13 தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்கதரிசனமான கருத்தை தமிழ் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் ஏற்றுக்கொண்டமை வரவேற்கத்தக்க விடயம் என மேலும் தெரிவித்தார்.