நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலம் தொடர்பில் 196 திருத்தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பின் பின்னர், ஊழல் ஒழிப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஜூலை மாதம் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பித்தார்.
ஊழலுக்கு எதிரான ஐ.நா. வின் சில விதிகள் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த இந்த சட்டமூலம் முன்மொழியப்பட்டது.
ஊழல் தடுப்பு சட்டமூலத்தை இருபத்தெட்டு பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உயர் நீதிமன்றம் அண்மையில் அறிவித்த நிலையில் அரசியலமைப்புக்கு எதிரான சரத்துகள் திருத்தப்பட்டு இன்று நாடளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
புதிய ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் பிரகாரம் ஜனாதிபதி, உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், ஆளுநர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆணைக்குழு உறுப்பினர்களும் சொத்து மற்றும் பொறுப்பு குறித்த அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன், ஊழல் மோசடிகள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களின் உரிமைகள் புதிய சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படும் என நீதித்துறை, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.