காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வழக்கு விசாரணை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோடி எனும் சமூகத்தினரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக கருத்து தெரிவித்திருந்ததாக , சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து, ராகுல் காந்தி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதுடன் இந்த தண்டனையை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
100 நாட்களுக்கும் அதிகமாக தொகுதி பணிகளை செய்ய முடியாமல் இருப்பதாகவும் ஒரு பார்லி கூட்டத்தொடரில் பங்கேற்க முடியவில்லை எனவும் ராகுல காந்தி தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த நிலையில் , ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு குஜராத் அரசாங்கம் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டதுடன் குறித்த வழக்கை எதிர்வரும் ,04 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.