தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதன் மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
உத்தியோக பூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமானச் சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல் என்று சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்குமிடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுவதாகவும், அது சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர்.
இதன்போது இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணைக் குழாய்களை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.