13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக எழும் பிரச்சினைகளைத் துப்பாக்கிகள் கொண்டு தீர்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் கோருகின்றன.
சில கட்சிகள் இதற்கு எதிர்ப்பினை வெளியிடுகிறார்கள். ஆனால், இவ்வாறான பிரச்சினைக்கு தீர்வு தொடர்பாக யாரும் சிந்திப்பதில்லை.
துப்பாக்கிகள் கொண்டா இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்? அதனையா இவர்கள் கோருகிறார்கள்?
ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவரும் ஜனநாயகத்தை உறுதியாக நம்புகின்றவர்கள். இதனால்தான், அவசரமாக சர்வக்கட்சி மாநாட்டுக்கு நாளைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்டு பிரச்சினைகளுக்கான தீர்வினை முன்வைக்கலாம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.