மனித உடல் உறுப்புக்கள் ஒன்றோடு ஒன்று சமிக்ஞைகள் வாயிலாப் பேசிகொள்வதாக சென்னை ஐ.ஐ.டி.யின் உயிரியல் துறை பிரிவின் ஆராய்ச்சியாளர் மணிகண்ட நாராயணன் தெரிவித்துள்ளார்.
மல்ட்டிசென்ஸ் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள மருத்துவ ஆய்வறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.குறித்த ஆய்வறிக்கையின் படி ” மூளை மற்றும் வயிறு ஒன்றோடொன்று ஜீன் மூலம் பேசிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மனித உடலை பொறுத்தவரை சுமார் 20 000 க்கும் மேற்பட்ட ஜீன்கள் உள்ளன.
இந்த ஜீன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வேலை செய்வதில்லை. அது ஒவ்வொரு உறுப்பின் தேவைகளை அறிந்து தங்களது பணிகளை செய்கின்றன. இதன்மூலம் அனைத்து உடல் உறுப்புகளும் வேண்டிய சக்தியை பெற்று மனித இயக்கத்திற்கு உதவி செய்கிறது. ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தேவையான சமிக்ஞைகளை அனுப்பும் பொறுப்பு புரதங்களுக்கு உண்டு.
இந்த புரோட்டின்கள் மூலம் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்கள் தகவல் பரிமாற்றங்களை செய்து கொள்கின்றன. மேலும், மனித செயல்பாடுகளில் முக்கியத்துவம் பெற்ற ஜீன்கள் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் பாலமாக செயல்பட்டு முக்கிய தகவல் பரிமாற்றங்களை செய்கிறது. இந்த பணி மனித உடல் முழுமைக்கும் ஜீன்கள் திசுக்கள் மூலம் மேற்கொள்வதால் மனித உடல் ஆரோக்கியமாக அமைய வழிவகுக்கிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, தகவல் பரிமாற்றத்திற்கு மனித உடலில் உள்ள மூலக்கூறு கட்டமைப்புகளும் உதவி செய்வதாக தெரியவந்துள்ளது. மனித உடலின் உள்ளுறுப்புகளில் இந்த தகவல் தொடர்பு நெட்வொர்க் சிறப்பாக செயலாற்றுகிறது. மேலும், தட்பவெப்பம், மனித உடலுக்கு தேவையான ஆற்றல் உருவாக்கம் உள்ளிட்ட பணிகளையும் இந்த மூலக்கூறு கட்டமைப்புகள் ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தக்கவாறு செய்துவருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலமே மனித உடல் முழுமையும் நலமாகவும், வளமாகவும் இருப்பதாக இந்த மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.