சுகாதாரத்துறையில் இடம்பெறும் இந்த மாபியாவுக்கு எதிராக குரல் கொடுப்பதன் காரணமாக தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரின் அமைச்சின் கீழுள்ள அதிகாரிகள் மற்றும் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மையப்படுத்தி கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்திருக்கின்றோம்.
தற்போது வரையிலும் பல்வேறு கட்சிகளும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.
இந்த நாட்டில் மனசாட்சி உள்ள ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருப்பார்களாயின் சுகாதார அமைச்சு மக்களுக்கு செய்யும் இந்த மோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.
எங்களுக்கு தனிப்பட்ட விதத்தில் அவருடன் எவ்வித மனஸ்தாபமும் இல்லை. ஒரு தனிநபரின் பெயர் மீது நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்திருக்கின்றோம்.
ஆகவே அதற்கான மிகத் தெளிவாக காரணங்களையும் தகவல்களையும் ஆதாரங்களையும் முன்வைத்திருக்கின்றோம்.
நாட்டிலுள்ள வைத்தியாசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பான்பாடு, உடல் அவயவங்களை கொள்ளையடித்தல், நோயாளர்களை தாக்குதல் போன்ற பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
சுகாதாரத்துறையில் இடம்பெறும் இந்த மாபியாவுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்பதன் காரணமாக எங்களுக்கு மரண அச்சுறுத்தல் கூட விடுக்கப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.