சாரதி உறங்கியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மீசாலை கிழக்கை சேர்ந்த , மகேஸ்வரன் நவரஞ்சிதம் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி வைத்தியசாலைக்கு செல்வதற்காக குறித்த பெண் பேருந்துக்காகக் காத்திருந்த போது , வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த காரானது வீதியோரமாக நின்ற மரத்துடன் மோதி மரம் முறிந்து , அப்பெண்ணின் மீது விழுந்துள்ளது.
இவ் விபத்தில் படுகாயமடைந்த குறித்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காரின் சாரதி தூக்க கலக்கத்தில் மரத்துடன் காரினை மோதி விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்த நிலையில் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.