நீட் பரீட்சையை இரத்து செய்யுமாறு கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணியினர் மாபெரும் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்றைய தினம் முன்னெடுத்தனர்.
அந்தவகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் உட்பட பல தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்நிருந்தனர்.
இதன்போது நீட் பரீட்சையால் உயிரிழந்த மாணவ, மாணவிகள் பற்றிய வீடியோயொன்றும் ஒளிபரப்பட்டது.
இதனையடுத்து உண்ணாவிரதத்தில் நிறைவுரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் நீட் பரீட்சை இரத்து செய்யப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருப்பதாகவும், நீட் பரீட்சையை இரத்து செய்யும் ரகசியம் அது தான் என்றும் கூறினார்.
இதேபோல் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்ததோடு,விழுப்புரத்தில் நடைபெற்ற உண்ணாவிரத்தில் அமைச்சர் பொன்முடியும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையிலான தி.மு.க நிர்வாகிகளும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.