பாகிஸ்தானில் வசிரிஸ்தான் பகுதியில் உள்ள இராணுவச்சாவடி அருகே, நேற்று முன்தினம் பிற்பகல் கட்டுமான தொழிலாளர்கள் பயணித்த லொறியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஷவால் என்ற பகுதி அருகே சென்றபோதே குறித்த லொறியின் அடியில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் குண்டுவெடிப்பில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும் இருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரான அன்வார்-உல்-ஹக்கர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டு தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அங்கு பயங்கரவாதம் தலைதூக்கி உள்ளது.
குறிப்பாக ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளிலும் அவர்கள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. எனினும் தலிபான்கள் அதனை மறுத்து வருகின்றனர். அதேசமயம் பாகிஸ்தானிலும் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்று ஒரு தனி பயங்கரவாத அமைப்பு செயற்பட்டு வருகின்றது. குறித்த அமைப்பானது பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் மீது அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே அவர்கள்தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.