கொழும்பு, ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எட்டு மாத குழந்தையொன்று உயிரிழந்த விவகாரம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அவிசாவளை எபலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் எட்டு மாதங்களான டெஷான் விதுநெத் எனும் குழந்தை சுகயீனம் காரணமாக கடந்த ஓகஸ்ட் 4 ஆம் திகதி அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக ஓகஸ்ட் 5 ஆம் திகதி கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குழந்தைக்கு நோய் இருப்பதை உறுதி செய்யாமல் யூகத்தின் அடிப்படையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை டெஷான் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்தார்.
குறித்த குழந்தைக்கு மருந்தொன்று வழங்கப்பட்டதன் பின்னர் நோய் தீவிரமடைந்து உயிரிழந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
டெஷானின் உடல் நேற்று பிற்பகல் அவிசாவளையில் அமைந்துள்ள அவர்களது குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மருந்து ஒவ்வாமை காரணமாக குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய மறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.