நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, சபையில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழப்பத்தில் ஈடுபட்டமையால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
மேலும், குழப்பத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான நளீன் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரர் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பிரதிநபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியது.
இதன்போது, நேற்றைய அமர்வின்போது, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் அதிக நேரம் எடுத்தமையால், பின்னால் பேசிய உறுப்பினர்களுக்கு நேரம் போதாமல் போனதாகவும், எனவே இன்றைய சபை நடவடிக்கையின்போது நேரத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யுமாறும் ஆளும் தரப்பு பிரதம கொரடாவான பிரசன்ன ரணதுங்க, கேட்டுக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து, இன்று சபையில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, பிரதேச சபைகளில் மக்கள் சந்திப்புக்கூட்டம் நடத்தப்படக்கூடாது எனும் போது, இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார 21 ஆம் திகதி பிங்கிரிய பிரதேச சபையில் மக்கள் சந்திப்பொன்றை நடத்தினார் என்று சபையின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
20 ஆம் திகதி நாரம்மல பிரதேச சபையிலும் மக்கள் சந்திப்பொன்று நடத்தப்பட்டது என்றும் பிங்கிரிய பிரதேச சபை அருகில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் 150 பேரளவில் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும் நளின் பண்டார தெரிவித்தார்.
இதில் கலந்து கொண்டவர்களுக்கான தேநீர், பிரதேச சபைக்குள் வழங்கப்பட்டதாக கூறினார்.
இவர் இவ்வாறு தெரிவித்துக் கொண்டிருக்கும்போது, குறுக்கிட்ட ஆளும் தரப்பு பிரதம கொரடாவான பிரசன்ன ரணதுங்க, 10.30 இற்கு பின்னர் விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் சபையில் இருக்க மாட்டார்கள் என்பதால், இவ்வாறான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்று தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, நேரத்தை வீணடிக்காமல் சபை நடவடிக்கைகளுக்கு இடமளிக்குமாறு உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.
பின்னர், மீண்டும் நளின் பண்டார குறித்த பிரச்சினை தொடர்பாக பிரதமரிடம் கேள்வி எழுப்பியபோது, குறுக்கிட்ட பிரதமர் தினேஷ் குணவர்தன, இது சபையை குழப்பும் செயற்பாடு என்றும் சபையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் சபையை ஒத்திவைக்குமாறும் பிரதிசபாநாயகரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து, நளின் பண்டாரவின் ஒலிவாங்கி முடக்கப்பட்ட நிலையில், அவர் ஆசனத்திலிருந்து வெளியேறி சபாநாயகர் ஆசனத்திற்கு அருகில் வந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
கேள்வி கேட்க அனுமதி தருமாறு, பிரதி சபாநாயகரை நோக்கி கடும் தொனியில் அவர் கூச்சலிட்டார். இதனால், சபையில் குழப்பமானதொரு நிலைமை ஏற்பட்டது.
பிரதி சபாநாயகர், குழப்பத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களை ஆசனங்களுக்குச் சென்று அமர்ந்துக் கொள்ளுமாறு பல தடவைகள் கேட்டும் அவர்கள், சர்ச்சையில் ஈடுபட்டமையால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
10 நிமிடங்களுக்குப் பின்னர் சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளால் மக்களுக்கு நாடாளுமன்றின் மீதான கௌரவம் பாதிக்கப்படுவதாகவும் இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாமல் இருக்க, சபையில் சர்ச்சையில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான நளீன் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை இன்றைய அமர்வுகளில் இருந்து வெளியேற்றுவதாகவும் அறிவித்தார்.