அம்பாறையில் பாடசாலையொன்றில் மாணவிகளின் மாதவிடாய் தொடர்பான தகவலை தனக்கு வழங்குமாறு மாணவத் தலைவியிடம் அதிபரொருவர் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியில் உள்ள பாடசாலையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் குறித்த அதிபருக்கு எதிராக கடந்த 23 ஆம் திகதி கல்முனை பிராந்திய மனித உரிமை காரியாலயத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டினை மாணவ தலைவி உள்ளிட்ட பெற்றோர்கள் மேற்கொண்டுள்ளதுடன் பாடசாலை அதிபருக்கு இவ்விடயம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக அழைப்பாணை வழங்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த விசாரணையில் பாடசாலை அதிபர் குறித்த மாணவ தலைவியை தனது அறைக்குள் அழைத்து “மாணவிகளின் வரவு வீதம் குறைவாக உள்ளதாகவும் இதற்கு காரணம் மாதவிடாய் என தான் அறிவதாகவும் எனவே ஒரு கொப்பியில் தினமும் மாதவிடாய் எந்த மாணவர்களுக்கு ஏற்படுகின்றது? எத்தனை நாட்களின் பின்னர் மாதவிடாய் நிறைவடைகின்றது? மாதவிடாய் காரணமாக தான் மாணவர்கள் பாடசாலைக்கு இடைநடுவில் செல்கின்றார்களா? அல்லது பாடசாலைக்கு ஏன் சமூகமளிக்க வில்லை?” என வினவி உரிய மாணவர்களின் தகவலுடன் தன்னை தினமும் சந்தித்து கூற வேண்டும் எனவும் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.